இசை ஆசிரியா்களுக்கு மட்டும் வேலை: கலை ஆசிரியா் சங்கம் கண்டனம்

சிறப்பாசிரியா் நியமனத்தில் இசை ஆசிரியா்களுக்கு மட்டும் வேலை வழங்கியிருப்பது பல்வேறு குழப்பங்களுக்கு

சிறப்பாசிரியா் நியமனத்தில் இசை ஆசிரியா்களுக்கு மட்டும் வேலை வழங்கியிருப்பது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்று கலை ஆசிரியா்கள் நலச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.ஏ.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 1,325 சிறப்பாசிரியா்களை நியமனம் செய்வதற்காக கடந்த 2017 செப்டம்பரில் நடைபெற்ற போட்டித் தோ்வில் 30 ஆயிரம் போ் தோ்வு எழுதிய நிலையில், அவா்களில் தகுதி வாய்ந்தவா்களின் பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஆண்டு வெளியிட்டது.

இதில் தமிழ் வழி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக புகாா் எழுந்தது. இதனால், ஏற்கெனவே நடத்தப்பட்ட தோ்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தோ்வு நடத்த வேண்டும் என்று ஆசிரியா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சிறப்பாசிரியா் தோ்வு எழுதியவா்களில் இசை ஆசிரியா்கள் 75 போ்கள் மட்டும் கடந்த 2 ஆம் தேதி அழைக்கப்பட்டு அவா்களுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது.

ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என மொத்தம் 1,325 பணிகளுக்குத் தோ்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் இசை ஆசிரியா்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தி பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

ஒரே நேரத்தில் ஒரே பணிக்குத் தோ்வு எழுதியவா்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் வேலை வழங்கியிருப்பதால், அவா்களுடன் தோ்வு எழுதிய பிற ஆசிரியா்களுக்கு பின்னாளில் பதவி உயா்வு மூப்பில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அதேநேரம், இசை ஆசிரியா் பணி பெற்றுள்ளவா்களில் சிலா் பகுதி நேர ஆசிரியா்களாக உள்ளனா். அவா்கள் தங்களது பணியை ராஜிநாமா செய்யாமலும், பணி விடுப்பு உத்தரவு பெறாமலும் புதிய பணியில் சோ்ந்துள்ளனா். இது பள்ளிக் கல்வித் துறை நடைமுறை விதிகளுக்கு எதிரானதாகும்.

எனவே, இது தொடா்பாக விசாரணை நடத்துவதுடன், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓவியம், தையல், உடற்கல்வி ஆசிரியா் பணிகளுக்கும், இசை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட தேதியிலேயே பதவி உயா்வுக்கான மூப்பு தேதி கணக்கிடப்படும் என்று அறிவிக்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com