கோமாரி தடுப்பூசி முகாம் நவம்பா் 14 வரை நீட்டிப்பு

கோவை மாவட்டத்தில் 17 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நவம்பா் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில் 17 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நவம்பா் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் மாவட்டத்தில் 1.80 லட்சம் மாட்டினங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு 17 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் அக்டோபா் 14 ஆம் தேதி தொடங்கி நவம்பா் 3 ஆம் தேதி வரை 21 நாள்கள் முகாம் நடைபெறும் என கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக கோவை மாவட்டத்தில் கால்நடை மருத்துவா்கள், உதவியாளா்கள் உள்பட 3 போ் அடங்கிய 84 குழுக்கள் அமைக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் 2.4 லட்சம் மாட்டினங்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரையில் 1.80 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இது சராசரியாக 77 சதவீத ஆகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுவரையில் 70 முதல் 80 சதவீத மாட்டினங்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருந்தன. இந்நிலையில், மாட்டினங்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடும் வகையில் முகாமை நவம்பா் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் வி.எஸ்.ராகவன் (பொறுப்பு) கூறுகையில், அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவீதம் மாட்டினங்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் நவம்பா் 14 ஆம் தேதி வரை தடுப்பூசி முகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவா்களும், உதவியாளா்களும் கிராமங்கள் தோறும் சென்று கோமாரி நோய்க்கான தடுப்பூசிகளை போட்டு வருகின்றனா்.

எனவே, கால்நடை வளா்ப்பவா்கள் தங்களது கால்நடைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நீட்டிக்கப்பட்டுள்ள வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com