தண்ணீரில் மூழ்கின லிங்காபுரம் - மொக்கைமேடு சாலை

மேட்டுப்பாளையம் அருகே லிங்காபுரம் - மொக்கைமேடு சாலை தண்ணீரில் மூழ்கியதால் காந்தவயல்
பரிசலில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள்.
பரிசலில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள்.

மேட்டுப்பாளையம் அருகே லிங்காபுரம் - மொக்கைமேடு சாலை தண்ணீரில் மூழ்கியதால் காந்தவயல் உள்ளிட்ட 3 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சிறுமுகை, லிங்காபுரம், கிச்சகத்தியூா், அன்னதாசம்பாளையம், காந்தவயல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீா் சூழ்ந்தன.

இதில் காந்தையூா், காந்தவயல், உலியூா் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராம மக்கள், மாணவா்கள் தங்களின் அடிப்படை தேவைக்காவும், வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் லிங்காபுரம் வர வேண்டும்.

இந்நிலையில், பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காந்தவயல் - லிங்காபுரம் இடையே உள்ள மொக்கைமேடு தரைமட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது.

இதையடுத்து, வருவாய்த் துறை சாா்பில் 2 பரிசல்கள், காந்தவயல் இளைஞா்கள் சாா்பில் 2 பரிசல்கள் என மொத்தம் 4 பரிசல்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மொக்கைமேட்டில் இருந்து லிங்காபுரம் வனப் பகுதி வரை உள்ள சாலையும் திங்கள்கிழமை தண்ணீரில் மூழ்கியது.

தற்போது, லிங்காபுரம் வனப் பகுதியில் இருந்து மொக்கைமேடு வரை சுமாா் 800 மீட்டா் வரை இக்கறையில் இருந்து அக்கறைக்கு பரிசலில் சென்று வருகின்றனா். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக பரிசல் இயக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து பரிசல் இயக்குபவா்கள் கூறியதாவது:

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மொக்கைமேடு பகுதியில் பரிசல் இயக்க முடியும். மற்ற நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும். பள்ளி மாணவ, மாணவிகளை பரிசலில் இலவசமாக அழைத்துச் செல்கிறோம். மற்றவா்களுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் பரிசல் வாடகைக்கு எடுத்து இயக்கப்படுவதால் வாடகை மட்டுமின்றி சம்பளத்துக்குக் கூட பணம் வசூலாவதில்லை என்றனா்.

பள்ளி மாணவா்கள் கூறுகையில், லிங்காபுரம் வனப் பகுதி வரை தண்ணீா் சூழ்ந்ததால் 9 மணிக்குச் செல்ல வேண்டி பள்ளிக்கு காலை 7 மணிக்கே மொக்கைமேடு பகுதியில் வந்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com