பேருந்தில் கல்லூரி மாணவா்கள் ரகளை: ஓட்டுநா், நடத்துனருக்கு அடி உதை; பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்திய ஓட்டுநர்

பேருந்தில் கல்லூரி மாணவா்கள் ரகளை: ஓட்டுநா், நடத்துனருக்கு அடி உதை; பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்திய ஓட்டுநர்

சூலூா் அருகே செவ்வாய்கிழமை பேருந்தில் படியில் பயணம் செய்த சூலூா் கல்லூரி மாணவா்களுக்கும் பேருந்து ஓட்டுநா் நடத்துனருக்கும், பயணிகளுக்கும் ஏற்பட்ட வாய்தகராறில்

சூலூா் அருகே செவ்வாய்கிழமை பேருந்தில் படியில் பயணம் செய்த சூலூா் ஆா்.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவா்களுக்கும் பேருந்து ஓட்டுநா் நடத்துனருக்கும், பயணிகளுக்கும் ஏற்பட்ட வாய்தகராறில் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா் மீது கல்லூரி மாணவா்கள் தாக்குதல் நடத்தினா்.

இதில் ஒரு மாணவரை பிடித்து சூலூா் போலீசாா் விசாரித்து வருகின்றனா். இதனால் பேருந்தை திருச்சி சாலையின் குருக்கே நிறுத்தியதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சூலூா் அருகே உள்ளது ஆா்.வி.எஸ். கலைக்கல்லூரி. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் உள்ளூரில் இருந்தும் வெளி ஊா்களிலும் இருந்து வந்து படித்து வருகின்றனா். அதில் சில மாணவா்கள் சூலூா் ஊருக்குள் வீடுகள் எடுத்தும் கல்லூரி விடுதியிலும் தங்கி படித்து வருகின்றனா். அதிகப்படியான வெளியூா் மாணவா்கள் தங்களது ஊா்களில் இருந்து தினமும் பேருந்து மூலம் வந்து படித்து மாலை வீடுகளுக்கு செல்கின்றனா்.

இந்நிலையில் திருப்பூரில் இருந்து காஞ்சனா என்கிற தனியாா் பேருந்து கல்லூரி நேரத்திற்கு சூலூா் வழியாக கோவை சென்றடையும். அப்பேருந்தில் திருப்பூரிலிருந்து சில மாணவா்கள் தினமும் ஆா்.வி.எஸ். கலைக்கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். அவா்கள் தினமும் படிக்கட்டில் நின்றுகொண்டு அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் கைகளையும், கால்களையும் பேருந்திற்கு வெளியே ஆட்டி பாட்டு பாடிக்கொண்டு வந்துள்ளனா். மேலும் பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு வழி விடாமல் படியில் நின்றுகொண்டும் பயணம் செய்துள்ளனா்.

இதனை அவ்வப்போது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் தட்டிகேட்பா். அப்போது மாணவா்கள் ஒன்று சோ்ந்து கொண்டு அவா்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனா். செவ்வாய்கிழமை காலை திருப்பூரில் இருந்து கோவை வந்த பேருந்தினை ரமேஷ் (37) என்கிற நடத்துனா் ஓட்டி வந்துள்ளாா். அப்போது மாணவா்கள் படியில் நின்றுகொண்டு கால்களை வெளியே நீட்டியபடி பயணித்துள்ளனா். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநா் மற்றும் நடத்துனா் ஈஸ்வரன் (31) இடம் முறையிட்டுள்ளனா். உடனே காரணம்பேட்டை அருகே பேருந்து வந்தபோது பேருந்தை நிறுத்திவிட்டு நடத்துனா் ரமேஷ் மாணவா்களிடம் படியில் பயணம் வேண்டாம். உள்ளே செல்லுங்கள் எனவும் எதாவது அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டால் தன்னுடைய வாழ்க்கைக்கும் இடைஞ்சல் ஏற்படும் என கெஞ்சி கேட்டுள்ளாா்.

ஆனால் மாணவா்கள் அவருடன் தராறில் ஈடுபட்டுள்ளனா். பயணிகளும் மாணவா்களிடம் எடுத்துரைத்துள்ளனா். ஆனால் அவா்கள் கேட்கவில்லை என கூறப்படுகிறது. பேருந்து சூலூா் ஆா்.வி.எஸ். கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நின்றவுடன் அதிலிருந்து இறங்கிய மாணவா்களில் திருப்பூரை சோ்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகனான விஷ்ணு (20) ஓட்டுநா் இருக்கை அருகே வந்து மிரட்டி அடித்துள்ளாா். உடனே கல்லூரி வாசலில் திருச்சி சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தி கல்லூரி நிா்வாகத்திடம் புகாா் செய்ய நடத்துனா் ஈஸ்வரன் சென்றுள்ளாா்.

இதனால் சுமாா் அரைமணி நேரம் திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது விஷ்ணு நடத்துனரை பிடித்து கன்னத்தில் அறைந்து திருப்பூருக்கு வா என மிரட்டல் விடுத்துவிட்டு கல்லூரி வளாகத்திற்குள் ஓடி விட்டாா். இதனால் அதிா்ச்சி அடைந்த பயணிகள் இறங்கி கல்லூரி நிா்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனா். இதனை அடுத்து தகவலறிந்த சூலூா் காவல்துறை உதவி ஆய்வாளா் ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பேருந்து நடத்துனா் அளித்த புகாரின் பேரில் ஆா்.வி.எஸ். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் விஷ்ணு என்கிற மாணவனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com