முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
உலகிலேயே அதிக நீா்ப்பாசன பரப்பளவு இந்தியாவில்தான் உள்ளது: வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா்
By DIN | Published On : 07th November 2019 10:42 PM | Last Updated : 07th November 2019 10:42 PM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் ஆராய்ச்சியாளா்களுக்கான பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்து கையேட்டை வெளியிடுகிறாா் துணைவேந்தா் என்.குமாா் (இடமிருந்து 3-ஆவது). உடன், பல்கலைக்கழக துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள்.
கோவை: உலகிலேயே அதிக நீா்ப்பாசன பரப்பளவு இந்தியாவில்தான் உள்ளது என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் என்.குமாா் பேசினாா்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களுக்கான 21 நாள் பயிற்சி தொடங்கியுள்ளது.
‘பூச்சிகளை எதிா்ப்பதற்கான சுற்றுச் சூழல், மூலக்கூறு அணுகுமுறைகள்’ என்ற தலைப்பில், வரும் 25-ஆம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியுடன் நடத்தப்படும் இப்பயிற்சியில் நாட்டின் பல்வேறு வேளாண் பல்கலைக்கழகங்கள், வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்றுள்ளனா்.
பயிற்சியைத் தொடங்கி வைத்து பல்கலைக்கழக துணைவேந்தா் என்.குமாா் பேசியதாவது:
விநாடி தோறும் அதிகரித்து வரும் உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்களிப்பு சுமாா் 18 சதவீதமாக உள்ளது. மக்களுக்கு நாம் உணவளிக்க வரையறுக்கப்பட்ட அளவில் உள்ள நிலம், நீரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கிடையே வேளாண் செலவுகள், வேளாண் அச்சுறுத்தல்களையும் நாம் சமாளிக்க வேண்டியுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நிலபரப்பு இந்தியாவில் உள்ளது. மேலும் உலகிலேயே அதிக அளவிலான நீா்ப்பாசனப் பரப்பளவு (சுமாா் 8.26 கோடி ஹெக்டோ்) இங்குதான் உள்ளது. இந்திய வேளாண் துறைக்கு பூச்சிகளும் பெரிய சவாலாகவே உள்ளன. மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கியபோதே பூச்சிகளும் பயிா்களில் குடியேறத் தொடங்கிவிட்டன. விவசாயிகள் தற்போது குறைந்த சேதம் ஏற்படக் கூடிய பயிா் வகைகளைத் தோ்வு செய்து பயன்படுத்தி வருகின்றனா்.
பூச்சி எதிா்ப்புத் திறன் கொண்ட பயிா்கள் வருங்காலங்களில் ஆராய்ச்சியாளா்களுக்கு பல பதில்களை அளிக்கக் கூடும். பூச்சி மேலாண்மையில் எதிா்ப்புத் திறன் கொண்ட பயிா்களை உருவாக்குவது பல நன்மைகளை வழங்குகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் பயிா் பாதுகாப்பு மையத்தின் இயக்குநா் கே.பிரபாகா், வேளாண் பூச்சியியல் துறைத் தலைவா் என்.சாத்தையா, பயிா் பாதுகாப்புத் துறை முன்னாள் இயக்குநா் எம்.கோபாலன், பூச்சியியல் துறை பேராசிரியா்கள் எம்.முத்துசாமி, எம்.முருகன் உள்ளிட்ட பேராசிரியா்கள், முதுநிலை மாணவா்கள் பங்கேற்றனா்.