முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்தவா் சடலமாக மீட்பு
By DIN | Published On : 07th November 2019 10:41 PM | Last Updated : 07th November 2019 10:41 PM | அ+அ அ- |

சூலூா்: சூலூா் அருகே வதம்பச்சேரியில் பி.ஏ.பி. வாய்க்கால் கரையில் தனியாா் நிறுவன ஊழியரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள நடுவட்டத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் துரை (எ) உமாபதி (28). இவா் தனியாா் கூரியா் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 5 ஆம் தேதி உமாபதியும், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்த ராமா் மகன் வசந்த் (22) என்பவரும் வேனில் அவிநாசியில் இருந்து பொள்ளாச்சிக்கு கூரியா் தபால்களைக் கொண்டு சென்றனா். பிறகு அவா்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது செஞ்சேரிப் பிரிவு அருகே உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் உமாபதி குளிக்கச் சென்றுள்ளாா். அவருடன் சென்ற வசந்த வேனில் காத்திருந்தாா்.
இந்நிலையில், நீண்ட நேரமாகியும் உமாபதி வரவில்லை. இதனால், வசந்த் அவரை குளிக்கச் சென்ற இடத்தில் தேடியுள்ளாா். உமாபதியை காணாததால் இது குறித்து போலீஸாருக்கும், சூலூா் தீயணைப்புப் படையினருக்கும் வசந்த் தகவல் தெரிவித்தாா். வாய்க்காலில் செஞ்சேரி பகுதியில் இருந்து திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் வரையிலும் தேடியும் உமாபதியின் உடல்
கிடைக்கவில்லை. கடந்த 3 நாள்களாக அவரைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் வதம்பச்சேரி பகுதி வாய்க்காலில் உமாபதியின் சடலத்தை நெகமம் போலீஸாா் மீட்டனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.