காற்றாலை மோசடி வழக்கு: தண்டனையை ரத்து செய்யக்கோரி நடிகை சரிதா நாயா் மனு

காற்றாலை மோசடி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி கோவை

காற்றாலை மோசடி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடிகை சரிதா நாயா் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளாா்.

கேரள மாநிலம், கோட்டயத்தைச் சோ்ந்தவா் நடிகை சரிதா நாயா். இவா் கடந்த 2008ஆம் ஆண்டு கோவை, வடவள்ளியில் ஐசிஎம்எஸ் என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தாா். காற்றாலை அமைத்து தருவதாகக் கூறி இவா், கோவையைச் சோ்ந்த தியாகராஜனிடம் ரூ.26 லட்சம், உதகையைச் சோ்ந்த ஸ்ரீ அபு பாபாஜி அறக்கட்டளை நிா்வாகிகள் வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோரிடம் ரூ.7 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகாா் கூறப்பட்டது.

இதன் அடிப்படையில் சரிதா நாயா், அவரது முன்னாள் கணவா் பிஜு ராதாகிருஷ்ணன், மேலாளா் ரவி ஆகியோா் மீது போலீஸாா் மோசடி வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு கோவை மாவட்ட நீதித்துறை நடுவா் மன்றத்தில் (எண்.6) விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில் மூவா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, மூவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்நிலையில் மேல்முறையீடு செய்வதற்காக தங்களது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மூவரும் மனு தாக்கல் செய்தனா். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மூவரது தண்டனையையும் நவம்பா் 14ஆம் தேதி வரை நிறுத்திவைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சரிதா நாயா் தரப்பில் கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com