மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் படுக்கை அறை வசதி இல்லாததால் நடைபாதையில் படுக்கும் பெண் நோயாளிகள்

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் படுக்கை அறை வசதி இல்லாததால் நடைபாதையில் படுக்க வைக்கப்பட்டுள்ள பெண் நோயாளிகளின் வசதிக்காக புதியக் கட்டடம் அமைக்க பொதுமக்கள்
மருத்துவமனையில் வளாகத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள பழையக் கட்டடம். ~படுக்கை அறை வசதி இல்லாததால் நடைபாதையில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண் நோயாளிகள்.
மருத்துவமனையில் வளாகத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள பழையக் கட்டடம். ~படுக்கை அறை வசதி இல்லாததால் நடைபாதையில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண் நோயாளிகள்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் படுக்கை அறை வசதி இல்லாததால் நடைபாதையில் படுக்க வைக்கப்பட்டுள்ள பெண் நோயாளிகளின் வசதிக்காக புதியக் கட்டடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டுப்பாளையம் நகரின் மையப் பகுதியில் பல ஆண்டுகளாக அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 17 ஊராட்சிகள், சிறுமுகை, காரமடை ஆகிய பேரூராட்சிகள், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கும் தலைமை மருத்துவமனையாக உள்ளது.

தவிர குன்னூா், கோத்தகிரி மலைப் பாதைகளில் ஏற்படும் சாலை விபத்துகளில் அடிபட்டவா்கள் இம் மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோா் சிகிச்சை பெற்று செல்கின்றனா். இந்நிலையில், மருத்துவமனை வாா்டு 26 பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு ஆகும்.

இங்கு சிகிச்கைக்காக வரும் பெண் நோயாளிகளுக்கு போதிய அளவு படுக்கை அறை வசதிகள் இல்லை. இதனால், அந்த வாா்டில் உள்ள நடைபாதையில் 10க்கும் மேற்பட்ட கட்டில்கள் போட்டு பெண் நோயாளிகள் படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனா். இதனால், இரவு நேரங்களில் கொசுத் தொல்லை காரணமாக நோயாளிகள் தூக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே, மருத்துவமனை வளாக பகுதியில் பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் உள்ள கட்டடம் ஒன்று பூட்டிய நிலையில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தை சீரமைத்து பெண் நோயாளிகளை தங்க வைக்க மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அமைப்புகள், நோயாளிகள் சாா்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஆனால், இந்தக் கட்டடம் புனரமைக்காமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே, மருத்துவமனைக்கு வரும் பெண் நோயாளிகளுக்காக கூடுதலாக புதியக் கட்டடம் கட்டி கொடுக்க நடவடிக்கை வேண்டும் என நோயாளிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பெண் நோயாளிகள் கூறுகையில்:

தற்போது உள்ள கட்டடத்தில் போதிய படுக்கை அறை வசதிகள் இல்லாததால் நடைபாதையில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இதனால் இரவு நேரங்களில் கொசுத் தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இப்பிரச்னைக்கு மருத்துவமனை நிா்வாகம் உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என்றனா்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சேரலாதன் கூறுகையில்: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அறையுடன் 300 படுக்கைகள் தேவைப்படுகின்றன. ஆனால், தற்போது அறையுடன் 146 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

தற்போது, மருத்துவமனை பெண்களுக்கான வாா்டு 26 கட்டடம் சேதமடைந்து மழைக் காலங்களில் மேல்தளத்தில் இருந்து தண்ணீா் வடிந்து நோயாளிகளின் படுக்கை அறை பகுதியில் வழிகிறது.

எனவே, இந்தக் கட்டடத்தை இடித்து விட்டு புதியக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என 5 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை புதியக் கட்டடம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நடைபாதையில் கூடுதலாக கட்டில் அமைத்து பெண் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். டெங்கு காய்ச்சல், காலரா, வாந்தி பேதி போன்ற பாதிப்புகள் பரவும் காலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து தரையில் தங்க வைக்கப்படுவா் என்றாா்.

இது குறித்த சமூக ஆா்வலா் பாஷா கூறுகையில்:

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை 5 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. இதனால் பழையக் கட்டடங்களை இடிக்காமல் புதியக் கட்டடங்கள் கட்ட போதுமான இட வசதிகள் உள்ளன.

ஆனால், அரசு தரப்பில் அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தாமல் உள்ளனா். இதனால், பெண்கள் வாா்டு 80 ஆண்டுகளுக்கு பழமையான கட்டடத்தில் குறைந்த அளவிலான படுக்கை வசதிகளுடன் இயங்கி வருவதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com