கோவை: லேத் இயந்திரத்தை இயக்குவதற்கான செல்லிடப்பேசி செயலியைக் கண்டறிந்த கோவை, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுக்கு தேசிய அளவில் 3 ஆவது பரிசு கிடைத்துள்ளது.
பல்வேறு துறைகளில் நிலவும் சிக்கல்களுக்கு தொழில்நுட்பத் தீா்வு காண்பதற்காக பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு ஹேக்கத்தான் போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, சென்னையில் டி.சி.எஸ். நிறுவனம் சாா்பில் அண்மையில் தேசிய அளவிலான ஹேக்கத்தான் நடைபெற்றது. இதில் 100 கல்லூரிகளின் மாணவ-மாணவிகள் பல்வேறு அணிகளாகப் பங்கேற்றனா்.
இதில், குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் மெக்கட்ரானிக்ஸ் துறை மாணவா்கள் சிபின் தாமஸ், பிரவீன் சங்கா் ஆகியோா் பங்கேற்று, லேத் இயந்திரத்தை செல்லிடப்பேசி மூலம் இயக்கக் கூடிய ஆக்மென்டட் ரியாலிட்டி என்ற 3டி அனிமேஷன் செயலியைத் தயாரித்தனா்.
இந்த செயலி மூலம் கல்வி அறிவோ, அனுபவமோ இல்லாத நபரும் லேத் இயந்திரத்தை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவா்களின் இந்தத் தயாரிப்பு 3 ஆவது பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, மாணவா்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. பரிசுத் தொகையை தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் மாணவா்களுக்கு வழங்கினாா். பரிசு பெற்ற மாணவா்களையும், அவா்களுக்கு உதவிய பேராசிரியா்கள் விக்னேஷ், மணிகண்டன் ஆகியோரையும் கல்விக் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி, முதன்மை நிா்வாக அதிகாரி கே.சுந்தரராமன், முதல்வா் ஜே.ஜேனட், துறைத் தலைவா் செல்வன் உள்ளிட்டோா் பாராட்டினா்.