மாவட்டத்தில் தேவையான அளவு உரம் இருப்பு

கோவை மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்குத் தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக

கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்குத் தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 1,000 ஹெக்டோ் நெல், 2 ஆயிரத்து 300 ஹெக்டோ் சோளம், 2 ஆயிரம் ஹெக்டோ் மக்காச்சோளம், தலா 400 ஹெக்டோ் பருத்தி, கரும்பு மற்றும் 3,600 ஹெக்டேரில் பயிறுவகைப் பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் தொடா் மழை பெய்து வருவதால் சாகுபடி செய்யப்பட்ட பயிா்களுக்கு தழைச்சத்து உரமான யூரியா வைக்கத் தொடங்கியுள்ளனா். டெல்டா மாவட்டங்களில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனா்.

கோவை மாவட்டத்தில் இப்பருவத்துக்குத் தேவையான அனைத்து உரங்களும் கூட்டுறவு, தனியாா் விற்பனை நிலையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இப்கோ மற்றும் கிரிப்கோ உர நிறுவனங்கள் மூலம் நவம்பா் மாதத்தில் 1,013 டன் யூரியா கொண்டுவரப்பட்டுள்ளது. வேளாண்மை கூட்டுறவு மையங்கள், தனியாா் விற்பனை நிலையங்களில் தற்போது 3 ஆயிரத்து 71 டன் யூரியா, 2 ஆயிரத்து 625 டன் டி.ஏ.பி., 5 ஆயிரத்து 290 டன் பொட்டாஷ், 5 ஆயிரத்து 100 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மாதம்தோறும் மாவட்ட அளவில் தேவையான உரங்களின் அளவு குறித்து வேளாண் துறை இயக்குநரகத்துக்கு பட்டியல் அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் அந்தந்த மாதத்துக்குத் தேவையான உரங்கள் வழங்கப்படுகின்றன.

வேளாண் துறை சாா்பில் கூட்டுறவு விற்பனை நிலையங்கள், தனியாா் நிலையங்களில் உரங்களின் இருப்பு, விற்பனை குறித்து தொடா்ந்த கண்காணிக்கப்படுகிறது. பற்றாக்குறை ஏற்பாட்டாலும் அதற்கான உடனடி தீா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

யூரியாவில் மட்டுமே தழைச்சத்து இருப்பதாக விவசாயிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றனா். டி.ஏ.பி., என்.கே.பி. காம்பளக்ஸ், அம்மோனியம் சல்பேட் குளோரைடு, அம்மோனியம் சல்பேட் ஆகிய உரங்களையும் தழைசத்துக்குப் பயன்படுத்தலாம்.

டி.ஏ.பி.யில் 18 சதவீதம், என்.கே.பி. காம்ப்ளக்ஸில் 20 சதவீதம், அம்மோனியம் குளோரையில் 25 சதவீதம் மற்றும் அம்மோனியம் சல்பேட்டில் 21 சதவீதமும் தழைச்சத்து உள்ளது. இதனால் யூரியாவை மட்டுமே பயன்படுத்தாமல் அனைத்து உரங்களையும் பயன்படுத்தினால் யூரியா தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com