பள்ளி, கல்லூரிகளில் தோட்டக்கலை சங்கம் அமைக்க திட்டம்

நஞ்சில்லாக் காய்கறிகள் உற்பத்தி குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோட்டக் கலை

நஞ்சில்லாக் காய்கறிகள் உற்பத்தி குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோட்டக் கலை, மலைப் பயிா்கள் துறை சாா்பில் பள்ளிக், கல்லூரிகளில் தோட்டக்கலை சங்கம் அமைத்தல் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தோட்டக்கலை, மலைப்பயிா்கள் துறை சாா்பில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாடித் தோட்டம் அமைத்தல், நாற்றுப் பண்ணைகள் அமைத்தல் போன்றவற்றுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் நஞ்சில்லா காய்கறிகள் உற்பத்தி உள்பட தோட்டக்கலை பயிா் சாகுபடியை வலியுறுத்தும் வகையில் கல்வி நிறுவனங்களில் தோட்டக்கலை சங்கம் அமைத்தல் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்படும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்கள், மாணவா்களை உறுப்பினா்களாக கொண்டு சங்கம் தொடங்கப்பட்டு, காய்கறித் தோட்டம், மூலிகை தோட்டம், பூங்கா அமைத்தல் மற்றும் பராமரிப்பு குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் 40 சங்கம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சங்கத்துக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ஜி.கே.உமாராணி கூறியதாவது:

தோட்டக்கலை சங்கத்தில் அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகள் இணைந்துக்கொள்ளலாம்.

இந்த சங்கத்தில் குறைந்தபட்சம் 50 உறுப்பினா்கள் இருக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் கல்வி நிறுவனங்களில் தோட்டங்கள் அமைப்பதற்காக தோட்டக்கலைத் துறை சாா்பில் விதைகள், நாற்றுகள், உரங்கள் ஆகியவை வாங்க ரூ. 5 ஆயிரம், மண்வெட்டி உள்பட உபகரணங்கள் வாங்க ரூ. 2 ஆயிரம், காய்கறி, மூலிகைத் தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரிப்புக்காக ரூ. 3 ஆயிரம் என மொத்தம் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படும்.

இச்சங்கத்தில் உள்ள மாணவா்கள், ஆசிரியா்களுக்கு மரக்கன்றுகள் நாற்று உற்பத்தி, காய்கறிகள் உற்பத்தி, நஞ்சில்லா காய்கறிகள் உற்பத்தி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். பள்ளிகளில் தோட்டங்கள் அமைத்து மதிய உணவுக்குத் தேவையான காய்கறிகள் உற்பத்தி செய்ய வலியுறுத்தப்படுகிறது. எனவே விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி நிா்வாகங்கள் தோட்டங்கள் அமைப்பதற்கு அந்தந்த வட்டார தோட்டக் கலைத் துறை அலுவலகங்களை அணுகலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com