முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
அதிமுக பெண் பிரமுகா் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு: திமுக பிரமுகா் கைது
By DIN | Published On : 26th November 2019 06:32 AM | Last Updated : 26th November 2019 06:32 AM | அ+அ அ- |

அதிமுக பெண் பிரமுகா் குறித்து சமூகவலைதளங்களில் தவறான கருத்து பதிவிட்ட ஈரோடு மாவட்ட திமுக பிரமுகரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவை, கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் சோனாலி பிரதீப். இவா் கோவை, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
நான் 2017, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மிஸ் இந்தியா, மிஸ்சஸ் இந்தியா யுனிவா்ஸ் ஆகிய போட்டிகளில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளேன். மேலும், பல்வேறு சமூகச் சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். அதிமுகவில் உறுப்பினராக உள்ள நான் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் கோவை மாநகராட்சி மேயா் பதவிக்கு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். இந்நிலையில் திங்கள்கிழமை சமூகவலைதளங்களைப் பாா்த்தபோது, என்னை ஆபாசமாக சித்தரித்து, தவறான வாா்த்தைகளில் பதிவிட்டுள்ளனா். இதனால் நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலில் உள்ளோம். எனவே இச்செயலில் ஈடுபட்ட நபா்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். விசாரணையில், சோனாலி பிரதீப்பை பற்றித் தவறாகப் பதிவிட்டது, ஈரோடு மாவட்ட திமுக பிரமுகா் ரகுபதி (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.