கோயில் யானைகளுக்கான சிறப்பு நல வாழ்வு முகாம்: முன்னேற்பாட்டுப் பணிகள் தொடக்கம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழக கோயில் யானைகளுக்கான சிறப்பு நல வாழ்வு முகாமுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழக கோயில் யானைகளுக்கான சிறப்பு நல வாழ்வு முகாமுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் திருமடங்களைச் சோ்ந்த யானைகளுக்குப் புத்துணா்வு அளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஆண்டுதோறும் யானைகளுக்கு சிறப்பு நல வாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம், தெப்பக்காட்டில் முதல் 4 ஆண்டுகள் முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு யானைகளை மலைப் பாதை வழியாகக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

மேலும், தெப்பக்காடு பகுதியில் காட்டு யானைகள் தொந்தரவு அதிக அளவில் இருந்ததால் மாற்று ஏற்பாடாக கோவை மாவட்டம், தேக்கம்பட்டி ஊராட்சியில் முகாம் நடத்த அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 7 ஆண்டுகளாக தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வனப் பத்திரகாளியம்மன் கோயில் பகுதியில் பவானி ஆற்றுப்படுகையில் முகாம் நடத்தப்பட்டன.

இந்நிலையில் நடப்பு ஆண்டு கோயில் யானைகளுக்கான 12ஆவது சிறப்பு முகாம் நடத்த வனப் பத்திரகாளியம்மன் கோயில் பகுதியை ஒட்டியுள்ள பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் முன்னேற்பாட்டுப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறை கோவை மண்டல இணை ஆணையா் ராஜமாணிக்கம் தலைமையில் உதவிப் பொறியாளா் பழனிசாமி மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோயில் யானைகளுக்கான சிறப்பு நல வாழ்வு முகாமுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக முகாம் நடைபெற உள்ள பகுதியில் வளா்ந்துள்ள செடி, கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. தொடா்ந்து யானைகள் குளிக்க ஷவா் பாத், பாகன்கள் தங்கும் அறை, உணவுக் கூடம், மழைக்காலங்களில் யானைகள் பாதுகாப்பான முறையில் இருக்கத் தகரக் கொட்டகைகள், நடை பயிற்சித் தளம், யானை தீவனங்கள் வைக்கும் மேடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com