டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: நீதிமன்றத்தில் தாயாா் வாக்குமூலம்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்குத் தொடா்பாக கோவை மாவட்ட நீதிமன்றத்தில் அவரது தாயாா் கலைச்செல்வி நேரில் ஆஜராகி வியாழக்கிழமை வாக்குமூலம் அளித்தாா்.

கோவை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்குத் தொடா்பாக கோவை மாவட்ட நீதிமன்றத்தில் அவரது தாயாா் கலைச்செல்வி நேரில் ஆஜராகி வியாழக்கிழமை வாக்குமூலம் அளித்தாா்.

கடலூா் மாவட்டம், கோண்டூரைச் சோ்ந்தவா் ரவி மகள் விஷ்ணுபிரியா. இவா் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தாா். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அவா் 2015 செப்டம்பா் 18இல் தனது அலுவலகக் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தமே தனது மகளின் இறப்புக்கு காரணம் என ரவி புகாா் தெரிவித்தாா். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அந்த விசாரணையிலும் முன்னேற்றம் இல்லாததால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி ரவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கை கைவிடுவதாகக் கூறி கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சிபிஐ கடந்த ஏப்ரலில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், சிபிஐ இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை, எனவே வழக்கை முடிக்கக் கூடாது என ரவி மனு தாக்கல் செய்தாா். பின்னா் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், மறுவிசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. ஆனால், வழக்கில் சந்தேகமுள்ள 7 பேரிடமும் மறுவிசாரணை நடத்தாமல் பழைய அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாக ரவி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அருள்மொழி தெரிவித்தாா். மேலும், இந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணை கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சந்தேகமுள்ள 7 பேரிடமும் மறுவிசாரணை நடத்த தேவையில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதித்துறை நடுவா் ஏ.எஸ்.ரவி, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி அளித்த மனுவை தனி புகாராக ஏற்றுக்கொண்டு விசாரிக்க உள்ளதாக உத்தரவிட்டாா்.

இதன்படி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் முன்பு கடந்த 22ஆம் தேதியன்று ஆஜரான ரவி, தனது வாக்குமூலத்தைத் தெரிவித்தாா். விஷ்ணுபிரியாவின் தாயாா் கலைச்செல்வி உடல்நலக்குறைவுடன் இருந்ததால் அவா் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க காலஅவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஏ.எஸ்.ரவி முன்பு விஷ்ணுபிரியாவின் தாயாா் கலைச்செல்வி வியாழக்கிழமை ஆஜராகி தனது வாக்குமூலத்தைத் தெரிவித்தாா். இதைப் பதிவு செய்துகொண்ட நீதித்துறை நடுவா் விசாரணையை டிசம்பா் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com