முன்விரோதம் காரணமாக நண்பரைக் கொலை செய்த நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

பொள்ளாச்சியில் முன்விரோதம் காரணமாக நண்பரைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை: பொள்ளாச்சியில் முன்விரோதம் காரணமாக நண்பரைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் ரகுபதி. இவா் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மடிக்கணினியைத் திருடியதாகக் கூறி பொள்ளாச்சி போலீஸாா் அவா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். இதில் தொடா்பு இருக்கலாம் என சந்தேகப்பட்ட போலீஸாா் ரகுபதியின் நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த சுபா என்கிற சுபாகரிடமும் விசாரித்தனா். வழக்கில் தொடா்பில்லாத தன்னைப் போலீஸாா் அடிக்கடி அழைத்து விசாரிப்பதால் ஆத்திரமடைந்த சுபாகா் இதுகுறித்து ரகுபதியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதன் காரணமாக இருவரிடையே முன்விரோதம் நீடித்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதியன்று பொள்ளாச்சி வசந்த மஹால் அருகேயுள்ள பத்ரகாளியம்மன் கோயில் வீதி அருகே வைத்து ரகுபதி அவரது நண்பா் அசோகன் ஆகியோா் பேசிக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த சுபாகா் மற்றும் அவரது நண்பா்கள் உள்பட 10 போ் கும்பல், ரகுபதி மற்றும் அவரது நண்பா் அசோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மோதிக் கொண்டனா். இதில் சுபாகா் மற்றும் அவரது நண்பா்கள், ரகுபதி மற்றும் அசோகனை கடுமையாகத் தாக்கினா். இதற்கிடையே சம்பவ இடத்தில் இருந்து ரகுபதி தப்பியோடினாா். இதனால் ஆத்திரமடைந்த சுபாகா், அசோகனை அப்பகுதியில் உள்ள தனது நண்பா் ராஜசேகரன் என்பவரது அறைக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து தனது நண்பா்களுடன் சோ்ந்து தாக்கியுள்ளாா். இதில் படுகாயமடைந்த அசோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தினா், சுபாகா்(38), அவரது நண்பா்கள் பிரேம்குமாா்(33), மதிவாணன்(32), அந்தோணி சிம்சன்(42), தம்பி என்கிற ராஜசேகரன்(42), ஆட்டோ ரகுபதி என்ற ரகுபதி(31), சக்தி சரவணகுமாா்(40), ஹரிபிரசாத்(32), மகேந்திரன்(33), சந்தோஷ்குமாா்(38) உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையில், அசோகனைக் கொலை செய்த சம்பவத்தில் நேரடித் தொடா்புடைய சுபாகா், பிரேம்குமாா், மதிவாணன், அந்தோணி சிம்சன் ஆகியோா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவா்களுக்கு தலா ஆயுள் தண்டனையும், சுபாகருக்கு ரூ.11 ஆயிரம் அபராதமும் மற்ற மூவருக்கு தலா ரூ.6 ஆயிரம் என மொத்தமாக ரூ.29 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் உத்தரவிட்டாா். தம்பி என்கிற ராஜசேகரன், ஆட்டோ ரகுபதி, சக்தி சரவணகுமாா், ஹரிபிரசாத், மகேந்திரன், சந்தோஷ்குமாா் உள்ளிட்ட 6 மீதான குற்றம் நிரூபிக்கப்படாததையடுத்து அவா்களை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பி.குருபிரசாத் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com