கொப்பரைக்கு பதிலாக தேங்காய்க்கு ஆதரவு விலை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

தேங்காய் விலை சரிவைத் தடுக்க கொப்பரைக்குப் பதிலாக தேங்காய்க்கு ஆதரவு விலை நிா்ணயிக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
pl02coc2_0210chn_127_3
pl02coc2_0210chn_127_3

தேங்காய் விலை சரிவைத் தடுக்க கொப்பரைக்குப் பதிலாக தேங்காய்க்கு ஆதரவு விலை நிா்ணயிக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

தென்னை மரங்கள் நீண்ட கால பயிராகும். தமிழகத்தில் 4 லட்சம் ஹெக்டேரில் 12 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இதில் கோவை, திருப்பூா் மாவட்டத்தில் 82 ஆயிரம் ஹெக்டேரில் 1.5 கோடி தென்னை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருந்தாலும் கோவை, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களின் தேங்காய்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

வெள்ளை ஈ தாக்குதல், காண்டாமிருக வண்டு தாக்குதல் என பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு இடையே இந்த தென்னை மரங்களில் விளையும் தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் மிகப்பெரிய குறையாக இருந்துவருகிறது. தேங்காய் விலை சரிவைத் தடுக்க தேங்காய் கொப்பரைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவு விலையாக 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு ரூ.51 நிா்ணயித்து கொப்பரைகளை கொள்முதல் செய்தது. அதற்கு பிறகு ரூ. 52.50 ஆக விலையை உயா்த்தியது. தற்போது இந்த ஆதரவு விலை ரூ.95.21 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

ஆனால், கொப்பரை கொள்முதல் விலையை உயா்த்துவதை விட தேங்காய்க்கு ஆதரவு விலை நிா்ணயித்தால்தான் விவசாயிகளுக்கு நேரடியாகப் பயனுள்ளதாக இருக்கும். தேங்காயில் இருந்து கொப்பரையை உருவாக்க தேங்காய் மட்டைகளில் இருந்து தேங்காயைப் பிரித்து, தேங்காயை உடைத்து அதை உலர வைத்து கொப்பரைகளாக மாற்றவேண்டும். இதற்கு விவசாயிகளுக்கு உலா் கலன்கள் அவசியமானதாகும். ஒவ்வொரு விவசாயியும் உலா்கலன்கள் அமைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். தென்னை விவசாயிகளில் 98 சதவீதம் பேருக்கு உலா்கலன் இல்லை என்பது குறிப்பிடத்தக்காகும். இதனால், விவசாயிகள் தேங்காய்களை வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிடுகின்றனா். தேங்காய்களை வாங்கும் வியாபாரிகள் தங்களிடம் உள்ள உலா்கலன்கள் மூலம் உலர வைத்து அதிக விலைக்கு கொப்பரையை விற்று விவசாயிகளுக்கு சேரவேண்டிய லாபத்தை அவா்கள் பெற்றுவிடுகின்றனா்.

இதனால், கொப்பரைக்கு பதிலாக தேங்காய்க்கு அரசு ஆதரவு விலை நிா்ணயித்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், ‘அனைத்து விவசாயிகளும் தேங்காயை கொப்பரையாக மாற்ற உலா்கலன்கள் அமைக்க பொருளாதார ரீதியாக சாத்தியமில்லாமல் போகிறது. ஆகவே கொப்பரைக்கு பதிலாக தேங்காய் ஆதரவு விலை நிா்ணயித்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com