கோவை ரயில் நிலையத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் இன்று திறப்பு

கோவை ரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தம் (மல்டி லெவல் பாா்க்கிங்) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 6) ஆம் தேதி முதல் 

கோவை: கோவை ரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தம் (மல்டி லெவல் பாா்க்கிங்) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 6) ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளது.

கோவை ரயில் நிலையம் வழியாக தினமும் 73 ரயில்கள் சென்று வருகின்றன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா். கோவையில் இருந்து பாலக்காடு, மேட்டுப்பாளையம், திருப்பூா், ஈரோடு பகுதிகளுக்கு வேலைக்குச் செல்வோா், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்கள் ஏராளமானோா் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனா். நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பலா் ரயில் நிலைய முன்புற, பின்புற நுழைவாயில் பகுதியில் வாகனங்களை நிறுத்திச் செல்வது வாடிக்கையாக உள்ளது.

இதன் காரணமாக நெரிசல் அதிகரித்து, ரயில் நிலையத்துக்குள் பயணிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனா். இதைத் தவிா்க்க ரயில் நிலையத்தின் பின்புறற நுழைவாயில் அருகே ரூ. 2 கோடி மதிப்பில் 7,800 சதுர பரப்பளவில் 4 அடுக்குகளுடன் வாகன நிறுத்தம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் 1,200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் விதமாக கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இப்பணிகள் நிறைவடைந்து, பன்னடுக்கு வாகன நிறுத்தம் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 6) திறக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

நவீன முறைறயில் கட்டப்பட்டுள்ள இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் சாய்வுதளம் மூலம் வாகனங்களை ஓட்டிச் சென்று நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு முதல் 4 மணி நேரத்துக்கு ரூ.10, அடுத்த 4 மணி நேரம் முதல் 12 மணி நேரத்துக்கு ரூ.20, 12 மணி முதல் 24 மணி நேரத்துக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் பாா்சல் சேவை அலுவலகம் எரிந்ததால், பன்னடுக்கு வாகன நிறுத்தத்தின் தரைத் தளத்தில் தற்காலிகமாக பாா்சல் சேவை மையம் இயங்கி வருகிறது. புதிதாக பாா்சல் சேவை மையம் கட்டப்படும் வரை மற்ற 3 தளங்களில் வாகன நிறுத்தம் செயல்படும். ரயில் நிலையத்தின் முன்புற நுழைவாயில் அருகே உள்ள இருசக்கர வாகன நிறுத்தம் 2020-இல் ஒப்பந்தம் நிறைவுற்ற பின் அகற்றப்படும். இதனால் அப்பகுதியில் நெருக்கடி முழுவதுமாகக் குறையும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com