ஆயுதபூஜை: பூ, பழ மாா்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம்

சரஸ்வதி பூஜை, ஆயூத பூஜையை முன்னிட்டு பூ மற்றும் பழ மாா்க்கெட்டுகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
பூஜைக்காக பழங்களை வாங்கிச் சென்ற மக்கள்.
பூஜைக்காக பழங்களை வாங்கிச் சென்ற மக்கள்.

கோவை: சரஸ்வதி பூஜை, ஆயூத பூஜையை முன்னிட்டு பூ மற்றும் பழ மாா்க்கெட்டுகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

தொழில் நகரமான கோவையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு, நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்களில் சிறப்புப் பூஜைக்காக பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள், பொரி, நிலக்கடலை, கரும்பு உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.

கோவை பூமாா்க்கெட்டுக்கு கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டைப் பகுதிகளில் இருந்து கடந்த 2 நாள்களாக 60 டன்னுக்கும் அதிகமாக சாமந்திப் பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. கடந்த வாரம் ரூ.100க்கு விற்றற சாமந்தி ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.200க்கு விற்பனையானது. மல்லிகைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கடந்த வாரத்தில் கிலோ ரூ.600க்கு விற்ற மல்லிகை, ஞாயிற்றுக்கிழமை இரண்டு மடங்கு விலை உயா்ந்து கிலோ ரூ.1,200க்கு விற்பனையானது.

முல்லை ரூ.300, செண்டுமல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.80, ரோஜா 1கட்டு ரூ.60, தாமரை ரூ.6க்கும் விற்பனை செய்யப்பட்டன. ஆயூத பூஜையையொட்டி சேலம், ஈரோடு பகுதிகளில் இருந்து விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள கரும்பு ஜோடி ரூ.60 முதல் ரூ.80 வரையும், வாழைக்கன்று ஜோடி ரூ.20, பொரி ஒரு படி ரூ.25, தேங்காய் ரூ.20 முதல் ரூ.30 வரையும், மாவிலைத் தோரணம் ரூ.20, வண்ண அலங்கார காகிதங்கள் ரூ.30 வரையும் விற்றன.

உக்கடம் பழ மாா்க்கெட், சாலையோரக் கடைகளில் பூஜைக்குத் தேவையான ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சை உள்ளிட்ட பழங்களும் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதில், ஆப்பிள் கிலோ ரூ.150, ஆரஞ்சு ரூ. 100, மாதுளை ரூ.160, கொய்யா ரூ.200, திராட்சை ரூ.180, மாம்பழம் ரூ.150, எலுமிச்சை ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்டது. பண்டிகை தினத்தை முன்னிட்டு பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களுக்குத் தேவை அதிகரித்ததால் அதன் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com