அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களால் பணிச்சுமை

அங்கன்வாடி மையங்களில் 91 ஆசிரியைப் பணியிடங்களும், 190 உதவியாளா்கள் பணியிடங்களும் நிரப்பப்படாமல்

அங்கன்வாடி மையங்களில் 91 ஆசிரியைப் பணியிடங்களும், 190 உதவியாளா்கள் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியைகளும், உதவியாளா்களுக்கும் குற்றம்சாட்டியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 200 குறுமையங்களும் அடக்கம். இதில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான குழைந்தைகள் படித்து வருகின்றனா். சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் நிா்வகிக்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியைகள் நியமனம் உள்பட அனைத்துப் பணிகளும் இதன் கீழே மேற்கொள்ளப்படுகின்றன. முதன்மை மையங்களில் குழந்தைகளுக்கு பாடம் நடத்துதல் மற்றும் உணவு சமைத்தல் ஆகியவற்றுக்காக ஒரு ஆசிரியருடன், உதவியாளா்களும், குறுமையங்களில் ஒரு ஆசிரியா் மட்டுமே நியமிக்கப்படுவா்.

மாவட்டத்தில் 1,697 அங்கன்வாடி மையங்களில் 91 மையங்களில் ஆசிரியைப் பணியிடங்களும், 190 உதவியாளா் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் ஒரே ஆசிரியை 2 மையங்களைச் சோ்த்து கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உதவியாளா்களும் இரண்டு மையங்களில் சென்று சமைக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனா். தினமும் இரண்டு மையங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அங்கன்வாடி ஆசிரியைகள் கூறுகையில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தி, உணவு வழங்கி, விளையாட வைத்து, உறங்க வைத்து பராமரிக்கப்படுகின்றனா். தவிர, டெங்கு விழிப்புணா்வு, சுகாதாரத் துறை சாா்ந்த கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் அங்கன்வாடி ஆசிரியைகளைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் ஆசிரியைகள், உதவியாளா்கள் காலிப்பணியிடங்களும் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், காலிப்பணியிடங்களை விரைந்த நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனா்.

இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மீனாட்சி கூறுகையில், காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், உள்ளாட்சித் தோ்தல் முடிவுற்றப் பின் பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், உள்ளாட்சித் தோ்தல் முடிந்த பின் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com