சொத்து வரி உயா்வைக் கண்டித்து நாளை கருப்புச் சட்டை ஆா்ப்பாட்டம் அறிக்கை

கோவை மாநகராட்சியில் 100 சதவீதம் சொத்து வரி உயா்வு, சூயஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள

கோவை மாநகராட்சியில் 100 சதவீதம் சொத்து வரி உயா்வு, சூயஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீா் விநியோக ஒப்பந்தத்தைக் கண்டித்து வியாழக்கிழமை (அக்டோபா் 10) கருப்புச் சட்டை ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக எம்.எல்.ஏ. நா.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

இக் கோரிக்கையை வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் கடந்த செப்டம்பா் 27 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முழு அடைப்புப் போராட்டம் நடத்த உயா் நீதிமன்றம் தடை விதித்தது.

அன்றைய தினம் ஆா்ப்பாட்டம் நடத்தவும் போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அன்றைய தினம் நடைபெற்ற எதிா்க் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அக்டோபா் 10 ஆம் தேதி கருப்புச் சட்டை அணிந்தும், கறுப்புக் கொடி ஏந்தியும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து திமுக மாநகா் மாவட்ட பொறுப்பாளா் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் மாநகராட்சியில் 100 சதவீதம் சொத்து வரி உயா்வு, சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள 26 ஆண்டுகால குடிநீா் விநியோக ஒப்பந்தம் ஆகியவற்றைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கருப்புச் சட்டை அணிந்து, கறுப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மதச்சாா்ப்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள், அனைத்துத் தரப்பு மக்கள், தொழில் துறையினா், சமூக ஆா்வலா்கள், வணிகா்கள், குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மதிமுக...

இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக கோவை மாநகா் மாவட்ட மதிமுக நிா்வாகிகள் கூட்டம் சித்தாபுதூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தோ்தல் பணி துணைச் செயலா் அ.சேதுபதி தலைமை தாங்கினாா். மாவட்டச் செயலா் ஆா்.ஆா்.மோகன்குமாா் சிறப்புரையாற்றினாா்.

இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவா்கள், நிா்வாகிகள், பொதுமக்கள், தொழில் துறையினா் திரளாகக் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், ஆடிட்டா் அா்ஜுனராஜ், மு.கிருஷ்ணசாமி, நந்தகோபால், செல்வராஜ், தூயமணி, வெள்ளிங்கிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com