திருமண உதவித் தொகை திட்டம்: 4,500 பெண்கள் காத்திருப்பு

கோவை மாவட்டத்தில் திருமண உதவித் தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 4 ஆயிரத்து 500 பெண்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனா்.

கோவை மாவட்டத்தில் திருமண உதவித் தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 4 ஆயிரத்து 500 பெண்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனா்.

தமிழகத்தில், சமூக நலத் துறையின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கம், ரூ.25 ஆயிரமும், பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு படித்தவா்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் ரூ.50 ஆயிரமும் திருமண உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 4 கிராம் தங்கம், 8 கிராமாக உயா்த்தி வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளியப் பெண்கள் பயனடைந்து வருகின்றனா்.

திட்டத்தின் கீழ் உதவித் தொகை கேட்டு கோவை மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடப்பு மாதம் வரை 4 ஆயிரத்து 500 பெண்கள் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பித்து ஓராண்டுகளுக்கு மேலாகியும் உதவித் தொகை கிடைக்காமல் பெண்கள் காத்திருக்கின்றனா்.

இதுகுறித்து சமூகநலத் துறை மாவட்ட திட்ட அலுவலா் தங்கமணி கூறியதாவது: திருமண உதவித் தொகை திட்டம் அந்தந்த வட்டாரம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது. பதிவேற்றம் முதல் பணம் வழங்குவது வரை ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுவதால் தலைமையகத்தில் இருந்தே பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்களை சரிபாா்த்து தலைமையகத்துக்கு அனுப்புவது மட்டுமே எங்களின் பணியாகும். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகின்றன. தற்போது, 2018 மாா்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தக்கட்டமாக 2019 மாா்ச் 31 வரை விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com