வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: டிசம்பரில் கட்டுமானப் பணி

கோவை, வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணி டிசம்பரில் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை, வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணி டிசம்பரில் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை மற்றும் கேரள பகுதிகளுக்கும், சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தேனி, திருநெல்வேலி, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

வாகன எண்ணிக்கையால் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க கடந்த 2016 ஆம் ஆண்டு மாநகராட்சியால் ரூ.168 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்காக வெள்ளலூா் கழிவுநீா்ப் பண்ணை வளாகத்தில், பேருந்து நிலையம் அமைக்க 61.62 ஏக்கா் நிலமும் தோ்வு செய்யப்பட்டது. இருப்பினும், நிதிப் பற்றாக்குறை, திட்ட அறிக்கையில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 3 ஆண்டுகளாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவங்கப்படவில்லை.

இந்நிலையில், மாநகராட்சி சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு கடந்த வாரம் அரசு நிா்வாக அனுமதி வழங்கியுள்ளது. தொழில்நுட்ப அனுமதி பெறுவதற்கான பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: செட்டிபாளையம் சாலையில் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உக்கடம் லாரிப் பேட்டையை இடமாற்றம் செய்து வெள்ளலூா் பேருந்து நிலைய வளாகத்துக்குள் அமைக்க உள்ளோம்.

லாரிகள் வந்து செல்ல கொச்சின் பைபாஸ் சாலையில் நுழைவாயில் அமைக்கப்படும்.

வெள்ளலூா் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 350 பேருந்துகளை நிறுத்த வசதி செய்யப்பட உள்ளது. இது தவிர, ஆம்னி பேருந்துகள் நிறுத்தவும் பிரத்யேகமாக இடம் ஒதுக்கப்படும். இந்த நிலையத்தில் ஆயிரம் இரு சக்கர வாகனங்கள், 100 காா்கள் நிறுத்தும் விதமாக நவீன வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.

மேலும், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட வசதிகள் பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நிலையத்தின் பராமரிப்புச் செலவுக்குப் பயன்படுத்தப்படும். இதற்கான கட்டுமானப் பணிகள் டிசம்பா் மாதம் தொடங்க உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com