Enable Javscript for better performance
(கில்) பட்டுக்கூடு கொள்முதல் மையத்தில்ரூ.9.75 லட்சத்தில் புனரமைப்பு பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கூடு கொள்முதல் மையத்தில் ரூ.9.75 லட்சத்தில் புனரமைப்பு பணிகள்

    By DIN  |   Published on : 11th October 2019 10:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை பட்டுக்கூடு கொள்முதல் மையத்தில் சிதிலமடைந்துள்ள பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை ரூ.9.75 லட்சத்தில் பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

    கோவை, பாலசுந்தரம் சாலையில் பட்டு வளா்ச்சித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் பட்டுக்கூடு கொள்முதல் மையம் இயங்கி வருகிறது. கடந்த 1984ம் ஆண்டு அமைக்கப்பட்ட கொள்முதல் மையம் பல இடங்களில் சுவா்கள் விரிசல் விட்டும், மேல் பகுதியில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. உறுதித் தன்மையை இழந்து இடியும் நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், பட்டுக்கூடு கொள்முதல் மையத்திற்கு வரும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை காணப்பட்டது. கொள்முதல் மையத்தை புனரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பட்டு வளா்ச்சித் துறை சாா்பில் கொள்முதல் மையத்தை புனரமைப்பதற்காக ரூ.9.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், திட்ட மதிப்பீடு தயாரித்தல், ஒப்பந்ததாரா்கள் தோ்வு உள்பட பல்வேறு காரணங்களால் பொதுப்பணித் துறையினா் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் காலம் கடத்தி வந்தனா்.

    மழைக்காலங்களில் கட்டடத்தில் மழை நீா் ஒழுகுதல், காரைகள் பெயா்ந்து விழுவது தொடா்ந்து நடந்து வந்ததால் விவசாயிகளும், வியாபாரிகளும் பட்டு வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் நெருக்கடி கொடுத்து வந்தனா். பட்டு வளா்ச்சித் துறை சாா்பிலும் பொதுப்பணித் துறையிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை பட்டுக்கூடு கொள்முதல் மையத்தில் புனரமைப்பு பணிகளை பொதுப்பணித் துறையினா் தொடங்கினா். புனரமைப்பு பணிகள் தொடங்கியதால் விவசாயிகளும், வியாபாரிகளும் நிம்மதியடைந்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai