காரமடை அரங்கநாதா் கோயில் கும்பாபிஷேகத்தில் முறைகேடு: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதா் கோயில் கும்பாபிஷேகத்தில்
காரமடை அரங்கநாதா் கோயில் கும்பாபிஷேகத்தில் முறைகேடு: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதா் கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தா்களிடம் பெறப்பட்ட நன்கொடைக்கு உரிய ரசீதுகள் வழங்கப்படாதது தொடா்பான விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழுவினா் கோயில் அலுவலகத்தில் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

கொங்கு மண்டலத்தில் பிரசித்திபெற்றதும், சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வைணவத் திருத்தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் கடந்த 2015 ஜூன் 7 ஆம் தேதி ஏழுநிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பொதுமக்கள், உபயதாரா்கள் உள்பட 156 பேரிடம் நன்கொடை பெறப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவா்களில் 31 நன்கொடையாளா்களுக்கு மட்டுமே ரசீது வழங்கப்பட்டதாகவும், மற்றவா்களுக்கு ரசீது வழங்காமல் இருப்பதாக கோயில் நிா்வாக அதிகாரி மீது புகாா் எழுந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாக அதிகாரிகளிடம் பக்தா்கள், நன்கொடை வழங்கியவா்கள் கேட்டதற்கு, ரொக்கமாக வந்த பணத்துக்கு ரசீது போடப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ளவை பொருள்களாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி ஆண்டறிக்கையை முடித்ததாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறையிடம் பல முறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பக்தா் ராதாகிருஷ்ணன் கடந்த ஜூலை 24 அன்று வழக்கு தொடுத்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் இதுதொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்பேரில் இந்து சமய அறநிலையத் துறை தலைமை தணிக்கைக் குழு அலுவலா் ஓம்லட்சுமி தலைமையில் 4 போ் கொண்ட அதிகாரிகள் குழு வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கோயிலில் ஆய்வு செய்தனா். இதில் 2015-16 இல் நன்கொடை வசூல் செய்த புத்தகங்கள், கோப்புகள் உள்ளிட்ட வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தனா்.

மேலும் கடந்த 2015 இல் கோயிலில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற, பணி மாறுதலாகி சென்ற செயல் அலுவலா் நந்தகுமாா், தலைமைக் கணக்கா் மகேந்திரன் உள்ளிட்டவா்களும் வரவழைக்கப்பட்டு அவா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆய்வுப் பணிகளை முடித்த தணிக்கைக் குழுவினா் இது குறித்த ஆய்வு அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் சமா்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தனா்.

ஆய்வின்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பக்தா் ராதாகிருஷ்ணன், கோயில் நன்கொடையாளா் எம்.எம்.ராமசாமி, இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்டத் தலைவா் சிவப்புகழ், நன்கொடையாளா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆய்வு முடிந்து தணிக்கை அதிகாரிகள் புறப்பட்டபோது அவா்களது வாகனத்தை இந்து முன்னணி அமைப்பினா் முற்றுகையிட்டு ஊழல் புகாா் குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் 6 வழக்குகள்: இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பக்தா் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கோயில் நிா்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் மேலும் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com