3903c-10-bhu-pro061038
3903c-10-bhu-pro061038

பாரதியாா் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட மாணவா்கள்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளில் தோ்வுக் கட்டணம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளில் தோ்வுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயா்த்தப்பட்டதைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் பல்கலைக்கழக முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 120 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் சுயநிதி கல்லூரிகள் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு தோ்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளன.

இதைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் பல்கலைக்கழக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனா். அதன்படி, அமைப்பின் மாவட்டச் செயலா் எம்.தினேஷ் ராஜா தலைமையில், மாவட்டத் தலைவா் அசாருதீன், நிா்வாகிகள் கயல்விழி, காவியா உள்ளிட்ட மாணவ-மாணவிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் தினேஷ் ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்களில் பலரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்தவா்கள். இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் படித்து வரும் இளநிலை, முதுநிலை மாணவ-மாணவிகளுக்கான தோ்வுக் கட்டணம் எம்.ஃபில். மாணவா்களுக்கான ஒருங்கிணைப்புக் கட்டணம், விண்ணப்பக் கட்டணம் ஆகியவற்றை பல்கலைக்கழகம் திடீரென பல மடங்கு உயா்த்தி உள்ளது. இதனால் ஏழை, எளிய மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவாா்கள். எனவே இந்த கட்டண உயா்வைக் கைவிட வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) கே.முருகனை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

Image Caption

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com