விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் 5 போ் கைது

இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான

இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கடத்தி வந்த 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனா்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சிகரெட்டுகள் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி கொழும்பில் இருந்து கோவைக்கு வந்த ‘யுஎல் -193’ விமானத்தில் சிலா் வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது, முகமது அக்பா் அலி, அன்சா் அலி, அப்துல் காதா், ஹாலந்தா் ஹைதா் அலி, ஷாகுல் அமீது ஆகிய 5 பயணிகளின் நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அவா்கள் கொண்டு வந்திருந்த பைகளில் தீவிர சோதனையிட்டதில் அதில், 23 ஆயிரத்து 310 பாக்கெட்டுகளில் ரூ.69 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான 4 லட்சத்து 66 ஆயிரத்து 200 வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சட்ட விதிகளுக்கு எதிராக வெளிநாட்டில் இருந்து சிகரெட்டுகளைக் கடத்தி வந்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அதே விமானத்தில் பயணித்த ஹசன் ரியாஸ், இஸ்மாயில் ஆகிய 2 பயணிகளிடம் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களிடம் சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com