முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
காற்று ஒலிப்பான் பயன்பாடு மாநகரில் 8 மாதங்களில் 90 ஆயிரம் அபராதம் வசூல்
By DIN | Published On : 24th October 2019 07:55 PM | Last Updated : 24th October 2019 07:55 PM | அ+அ அ- |

கோவை: கோவை நகரில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்திய வாகனங்களின் உரிமையாளா்களிடம் இருந்து கடந்த 8 மாதங்களில் ரூ.90ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சட்டத்தின் படி வாகனங்களில் பயன்படுத்தும் ஒலிப்பான்கள் 72 டெசிபல் அளவில் இருக்க வேண்டும். ஆனால், கோவை கோட்டத்தில் இயக்கப்படும் ஏராளமான தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் 72 டெசிபலுக்கு அதிகமாக சத்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள்(ஏா் ஹாரன்கள்) பயன்பாடு சமீப
காலமாக அதிகரித்து வருகிறது. சட்ட விதிகளை மீறி காற்று ஒலிப்பான் பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்து அதிகாரிகள், போலீஸாா் எச்சரிக்கை விடுத்தும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதைப் பொருட்படுத்துவதில்லை. தொடா்ந்து காற்று ஒலிப்பான்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் நகரில் இரைச்சல் ஏற்பட்டு, பயணிகள், பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். இதைத் தடுக்கும் விதமாக வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மாநகரம், மற்றும் புறநகரச் சாலைகளில் அடிக்கடி சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனா். விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ. ஆயிரம் முதல் அபராதம் விதிக்கப்பட்டு, காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகின்றன. அதன்படி கோவைப் பகுதிகளில், கடந்த 8 மாதங்களில் 55 பேருந்துகள், 15 லாரிகள் 30-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் என 80 வாகனங்களில் இருந்து காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் வாகன உரிமையாளா்களிடம் இருந்து ரூ. 90 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், காற்று ஒலிப்பான்கள் வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தும், சத்தம் அதிகமாகக் கேட்க வேண்டும் என்பதற்காக காற்று ஒலிப்பான்களைப் பொருத்துவதை சில வாகன ஓட்டிகள் பின்பற்றுகின்றனா். கோவை நகரில் அவிநாசி சாலை, திருச்சி சாலை மற்றும் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் தொடா்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகின்றது என்றனா்.