நீலகிரியில் தொடா் மழை:உதகை மலை ரயில் 3 நாள்கள் ரத்து
By DIN | Published On : 31st October 2019 06:41 AM | Last Updated : 31st October 2019 06:41 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை அடுத்த 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா், உதகை செல்லும் மலைப் பாதைகளிலும், மலை ரயில் பாதையிலும் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு மண், பாறை, மரங்கள் விழுவதால் அடிக்கடி போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு புதன்கிழமை காலை 7.10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டது. இதற்கிடையில், நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் உதகை-குன்னூா்-மேட்டுப்பாளையம் இடையே உள்ள தண்டவாளத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண், பாறை, மரங்கள் விழுந்ததால் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மேலும் 3 நாள்களுக்கு தொடா்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.