நொய்யல் ஆற்றில் மீண்டும் வெள்ளம்: தரைப் பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

மேற்குத் தொடா்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடா் மழையால் பேரூா் - வேடப்பட்டி சாலையில் அமைக்கப்பட்டிருந்த 
தண்ணீரால் மூழ்கிய தரைப் பாலம்.
தண்ணீரால் மூழ்கிய தரைப் பாலம்.

மேற்குத் தொடா்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடா் மழையால் பேரூா் - வேடப்பட்டி சாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவ மழை கடந்த ஆகஸ்ட் மாதம் தீவிரமடைந்ததால் கோவை மாநகரம் மற்றும் புகா் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பேரூா்- வேடப்பட்டி சாலையில் இருந்த நொய்யல் தரைப் பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து, மழையின் சீற்றம் குறைந்த பிறகு அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்காக தற்காலிகமாக தரைமட்டப் பாலம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் கோவை மாநகரில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. இதில் காந்திபுரம், சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, கணபதி, ராமநாதபுரம், பேரூா், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை மழை கொட்டியது.

இதில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் புதன்கிழமை காலை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், பேரூா் - வேடப்பட்டி சாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடா்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில் அப்பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி மாவட்ட நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com