பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளின் விவரங்களை கேட்டு ஆா்.டி.ஐ. மனு

கோவை மாவட்டத்தில் அரசு, தனியாரால் போடப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளின் விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அரசு, தனியாரால் போடப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளின் விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சோ்ந்த சிறுவன் சுஜித், மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதிலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்து பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகள், 37 பேரூராட்சிகள், மாநகரில் உள்ள 100 வாா்டுகளில் கடந்த 10 ஆண்டுகளில் அரசு, தனியாரால் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளின் தற்போதைய நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை சௌரிபாளையத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் எஸ்.பி.தியாகராஜன், மாநகராட்சி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆகியோரிடம் விவரம் கேட்டு மனு செய்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறும்போது, பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் தொடா்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சில விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது. அதன்படி, ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்றால் நிலத்தின் உரிமையாளா் 15 நாள்களுக்கு முன்பே அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

துளையிடும்போது அந்த இடத்தைச் சுற்றி வேலிகளும், தடுப்புகளும் அமைக்க வேண்டும். பணிகள் முடிவடைந்த உடன் ஆழ்துளைக் கிணறுகளை போல்ட் நட்டுகள் கொண்டு மூட வேண்டும். பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளில் மணல், களிமண், கூழாங்கற்கள் ஆகியவற்றைக் கொட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்த நடைமுறை எங்கும் பின்பற்றப்படுவதில்லை. கோவையில் தனியாா், அரசு அமைப்புகள், வணிக நோக்கிலான குடிநீா் நிறுவனங்கள் விதிகளுக்கு புறம்பாக அனுமதி பெறாமல் பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துள்ளன.

எனவேதான் கோவை மாவட்டத்தில் இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன, அவை முறையாக பராமரிக்கப்படுகின்றனவா, பயன்படாத கிணறுகள் எந்த நிலையில் உள்ளன என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டிருக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com