வீணாகக் கடலில் கலக்கும் மஞ்சப்பள்ளம் ஆற்று நீர்: சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க வலியுறுத்தல்

கோவை மஞ்சப்பள்ளம் ஆற்றில் உள்ள தடுப்பணைகள் சேதமடைந்துள்ளதால் இந்த ஆற்று நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
வீணாகக் கடலில் கலக்கும் மஞ்சப்பள்ளம் ஆற்று நீர்: சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க வலியுறுத்தல்

கோவை மஞ்சப்பள்ளம் ஆற்றில் உள்ள தடுப்பணைகள் சேதமடைந்துள்ளதால் இந்த ஆற்று நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
 விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி இந்த ஆற்றில் தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
கோவைப்புதூர், அறிவொளி நகர் பகுதியில் உள்ள மலைகளில் உருவாகும் மஞ்சப்பள்ளம் ஆறு குரும்பபாளையம், மதுக்கரை, பச்சாபாளையம், குமிட்டிபதி, வேலந்தாவளம் வழியாக கேரளம் சென்று கடலில் கலக்கிறது. மஞ்சப்பள்ளம் ஆற்று நீரை வாய்க்கால் மூலம் நேரடியாக விவசாயத்துக்குப் பயன்படுத்துவது இல்லை. ஆனால் தடுப்பணைகள் மூலமாக ஆங்காங்கே நீரை சேமித்து அதன் மூலம் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வாயிலாக விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
 தடுப்பணைகள் சேதம்: அதேபோல மேட்டூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் நீரும் ஈச்சனாரி வழியாக வந்து மஞ்சப்பள்ளம் ஆற்றில் கலக்கிறது. மஞ்சப்பள்ளம் ஆற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவ மழையின்போது ஆற்றில் வந்த நீர் முழுமையாக சேமிக்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மஞ்சப்பள்ளம் ஆற்றின் குறுக்கே இருந்த 5 தடுப்பணைகள் உடைந்து நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஆற்றில் வரும் நீர் அனைத்தும் கேரளத்தின் வழியாக கடலில் கலந்து வருகிறது. 
 மஞ்சப்பள்ளம் ஆற்றின் நீரை சேமிக்க உடைந்த தடுப்பணைகளை சீரமைக்கவும், கூடுதலாக தடுப்பணைகள் கட்டவும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் கூறியதாவது:
 மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக இருந்தது மஞ்சப்பள்ளம் ஆறு. இந்த ஆற்றின் நீரை சேமிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் குரும்பபாளையம் பகுதியில் அடுத்தடுத்துள்ள மூன்று தடுப்பணைகள் உடைந்து சேதமாகின.
 கண்டுகொள்ளாத அரசு: இதனை சரி செய்ய வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினோம். ஆனால் அரசு பாராமுகமாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு பெய்த பருவ மழையை சேமிக்க முடியவில்லை. ஒட்டுமொத்த நீரும் கடலுக்கு சென்றுவிட்டது. மஞ்சப்பள்ளம் ஆற்று நீரைத் தேக்கி வைப்பதால் மதுக்கரை, பாலத்துறை, நாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து விவசாயிகள் பயன்பெறுவர். இதுதொடர்பாக தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அளித்தோம். பொதுப் பணித் துறை அதிகாரிகளிடமும் மனு அளித்தோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து பொதுப் பணித் துறை அலுவலகம் நோக்கி நடைப்பயணம் சென்றோம். ஆனால் காவல் துறையினர் அனுமதி மறுத்து எங்களைக் கைது செய்தனர். இதே நிலை தொடர்ந்தால் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
 மழை நீர் சேகரிப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்களை தமிழக அரசு  செய்து வருகிறது. அதேபோல நீர்நிலைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும், நொய்யல் ஆறு வழிப்பாதைகளை சீரமைக்க வேண்டும், மஞ்சப்பள்ளம் ஆற்றில் சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும், கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com