உக்கடம் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து அதிகரிப்பு

தமிழகம், கேரளத்தில் மீன் பிடித் தடைக்காலம் முடிவடைந்ததால் 3 மாதங்களுக்குப் பிறகு கோவை மார்க்கெட்டுக்கு மீன் வரத்து அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 25 கிலோ எடையுள்ள வஞ்சிரம் மீன் விற்பனைக்குக்

தமிழகம், கேரளத்தில் மீன் பிடித் தடைக்காலம் முடிவடைந்ததால் 3 மாதங்களுக்குப் பிறகு கோவை மார்க்கெட்டுக்கு மீன் வரத்து அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 25 கிலோ எடையுள்ள வஞ்சிரம் மீன் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது. 
கோவை, உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளான கொச்சி, மங்களாபுரம், சாவக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் சராசரியாக 15 டன் முதல் 20 டன் மீன்கள் விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகின்றன.  இதில் அதிகபட்சமாக கேரளப் பகுதிகளில் இருந்து கோவைக்கு 15 டன்னுக்கும் அதிகமாக மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. 
தமிழகப் பகுதிகளில் இருந்து 3 டன் முதல் 5 டன் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. இவை, கோவை நகரம், புறநகரங்களில் உள்ள உணவகங்கள், நுகர்வோருக்கு மொத்தமாகவும், மார்க்கெட்டில் சில்லறையாகவும் விற்கப்படுகின்றன. 
 இந்நிலையில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக தமிழக அரசு ஆண்டுக்கு ஒருமுறை அறிவிக்கும் மீன்பிடித் தடை உத்தரவு, ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. 60 நாள்கள் மீன்பிடித்  தடை அமலில் இருந்ததால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். 
 கேரளத்தில் ஜூன் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை 60 நாள்களுக்கு மீன்பிடித் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 
இதனால் ராமேசுவரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு தினமும் 6 முதல் 8 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. 50 சதவீதம் மீன் வரத்து குறைந்ததால், தேவை அதிகரித்து மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. 
  கடந்த மாதங்களில் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,300,  கருப்பு வாவல் ரூ.800, வெள்ளை வாவல் ரூ.1,200, பாறை மீன் ரூ.500, விலாங்கு கிலோ ரூ.1,000, மத்தி ரூ. 200, சங்கரா ரூ.350, அயிலை ரூ.300, செம்மீன் ரூ.500-க்கு விற்பனையாகின. இந்நிலையில் கேரளத்தில் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததால் அங்கிருந்து உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு தினமும் 10 டன் மீன்கள், தமிழகப் பகுதிகளில் இருந்து 6 டன் என தினமும் 16 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. மூன்று மாதங்களுக்குப் பிறகு மீன் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900, கருப்பு வாவல் ரூ.500, வெள்ளை வாவல் ரூ.700, பாறை மீன் ரூ.300, விலாங்கு கிலோ ரூ.600, மத்தி ரூ. 100, சங்கரா ரூ.250, அயிலை ரூ.200, செம்மீன் ரூ. 400-க்கும் விற்பனையாகின. கடந்த மாதங்களை விட மீன்களின் விலை குறைந்துள்ளதால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
25 கிலோ வஞ்சிரம் மீன்:  ராமேசுவரம், பாம்பன் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 25 கிலோ எடையுள்ள வஞ்சிரம் மீன் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக 15 கிலோ எடையுள்ள மீன் விற்பனைக்கு வந்ததாகவும், 25 கிலோவில் முதன் முறையாக ராட்சத வஞ்சிரம் மீன் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் மீன் வியாபாரிகள் சங்கச் செயலாளர் அப்பாஸ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com