மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் பொருளாதார நெருக்கடி: ஜி.ராமகிருஷ்ணன்

மத்திய பாஜக அரசின் தவறான நடவடிக்கைகளால் நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மத்திய பாஜக அரசின் தவறான நடவடிக்கைகளால் நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது: மத்திய பாஜக அரசின் 100 நாள் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பல்வேறு சாதனைகளை செய்திருப்பதாக அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாக நீதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அண்மைக் காலத்தில் மட்டும் 3.50 லட்சம் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். குஜராத்தில் மட்டும் வைரத்துக்குப் பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் வேலையிழப்பு மிகப் பெரிய பிரச்னையாக உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருப்பதாகத் தொழில் துறை அமைச்சரே சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

தற்போது, அந்த நிலை மேலும் மோசமாகியுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு தொழில் மாவட்டங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. கோவையில் பொறியியல் துறை, ஃபவுண்டரி, பம்ப் செட், மோட்டார் உள்ளிட்ட பல தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மோட்டார் பம்ப் உற்பத்தியில் ஈடுபடும் பல தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதே இதற்கு காரணம். மத்திய அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, பொது செலவினங்களைக் குறைப்பது, திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது போன்றவற்றைச் செய்து நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தி வருகிறது.

கோவை மண்டலத்தில் தொழில் துறையினருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து விவாதிப்பதற்காக சிஐடியூ கோவை மாவட்டக் குழு சார்பில் தொழில் பாதுகாப்பு மாநாடு வரும் 13 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவையில் நடைபெற உள்ளது என்றார். 

கட்சியின் மாவட்டச் செயலர் வி.ராமமூர்த்தி, சிஐடியூ மாவட்டச் செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com