சுடச்சுட

  

  அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு முடக்கம்: நுகர்வோர் அமைப்பு புகார்

  By DIN  |   Published on : 12th September 2019 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனை ஆலோசனைக் குழு பல ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கியுள்ளதாக நுகர்வோர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. 
  கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றனர். இங்கு ஒருநாளைக்கு 7 ஆயிரத்துக்கும் அதிகமான புற நோயாளிகளும், 1,200 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  கோவை உள்பட மேற்கு மாவட்டங்களுக்கு மண்டல மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட மருத்துவமனை ஆலோசனைக் குழு பல ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
  இதுகுறித்து சிட்டிசன் வாய்ஸ் கோவை அமைப்பின் தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறியதாவது:
  மாவட்ட ஆட்சியரைத் தலைவராக கொண்டு மருத்துவமனை ஆலோசனைக் குழுவில் நுகர்வோர் அமைப்பினர், அரசியல் அமைப்பைச் சாராதவர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்.
  இந்தக் குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி மருத்துவமனையில் உள்ள பிரச்னைகள், நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையில் உள்ள குறைபாடுகள், நிர்வாகக் குறைபாடுகள் குறித்து விவாதிக்கும். இதில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு காண வாய்ப்புள்ளது. 
  ஆனால், மருத்துவமனை ஆலோசனைக் குழு செயல்படாமல் பல ஆண்டுகளாக முடங்கிப் போயுள்ளது. அதே நேரத்தில்,  கூட்டம் நடத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தால் நுகர்வோர் அமைப்புகளுக்கு ஏன் அழைப்பு விடுப்பதில்லை. 
  கூட்டங்கள் நடத்தப்படும்போது, மருத்துவமனையில் உள்ள பிரச்னைகள், நோயாளிகளிடம் லஞ்சம் வசூலிப்பது, உடல் கூறாய்வுக்காக இறந்தவர்களின் உறவினர்களை அலைக்கழிப்பது உள்ளிட்ட பிரச்னைகள் அனைத்தும் மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரியவரும்.
  பிரச்னைகள் தெரிந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். முடங்கிப்போயுள்ள மருத்துவமனை ஆலோசனைக் குழுவால் பல்வேறு முறைகேடுகள் மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரியாமல் போய்விடுகிறது.
  இதனால் தான் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடுகிறது. எனவே, மருத்துவமனை ஆலோசனைக் குழுக் கூட்டத்தை நடத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூ.அசோகன் கூறுகையில், "கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆலோசனைக் குழுக் கூட்டம் தேவைக்கேற்ப அவ்வப்போது நடத்தப்பட்டு, பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai