சுடச்சுட

  

  காட்டாற்று வெள்ளம் புகுந்த பகுதியில் மீண்டும் குடியேறிய மலைவாழ் மக்கள்: கண்டுகொள்ளாத வனத் துறை

  By DIN  |   Published on : 13th September 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சி அருகே அண்மையில் காட்டாற்று வெள்ளம் புகுந்ததில் கீழ்நாகர்ஊத்து என்ற மலைவாழ் கிராமம் மண்ணுக்குள் புதைந்தது. இந்த மக்களுக்கு வனத் துறை இதுவரை மாற்று இடம் வழங்காததால் மீண்டும் வெள்ளம் பாதித்த பகுதியிலேயே அவர்கள் குடியேறியுள்ளனர்.
  ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய நான்கு வனச் சரகங்களில் 50க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் மக்கள் தகர கூரை வீடுகள், கூரை வீடுகள் அமைத்து வசித்துவருகின்றனர். இதனால் மழை காலங்களில் இவர்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். 
  இந்நிலையில கடந்த மாதம் 8ஆம் தேதி இரவு சர்க்கார்பதி அருகே உள்ள கொழும்பன் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரம் அடி உயரத்துக்கும் மேல் உள்ள கொழும்பன் மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. காட்டாற்று வெள்ளத்தில் மண், பாறைகள் அடித்து வரப்பட்டன. இந்த வெள்ளம் சர்க்கார்பதி-கீழ்நாகர்ஊத்து  மலைவாழ் மக்கள் கிராமத்தில் புகுந்தது. இதில், 17க்கும் அதிகமான குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மண்ணுக்குள் புதைந்தன. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் மலைவாழ் மக்களும் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டனர். இதில் பலர் உயிர்தப்பிய நிலையில், 2 வயது குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்து உயிரிழந்தது. 6 பேர் காயமடைந்தனர்.
  இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பள்ளி வளாகம் மற்றும் மின்வாரியக் குடியிருப்பில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர். கீழ்நாகர்ஊத்து முழுவதும் வெள்ளத்தால் சேதம் அடைந்ததால் அப்பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு வனத் துறைக்கு, கோட்டாட்சியர் பரிந்துரை செய்தார். ஆனால், இதுவரை மாற்று இடம் வழங்காததால் வேறு வழியின்றி மழைவாழ் மக்கள் தாங்கள் முன்பு குடியிருந்த பகுதியிலேயே கூரைவேய்ந்த சரிசெய்து தற்போது குடியேறியுள்ளனர். இதில் 13க்கும் அதிகமான குடும்பங்கள் பழைய இடத்துக்கே குடிபெயர்ந்துவிட்டனர். மீதமுள்ள ஒரு சில குடும்பங்கள் மட்டும் பள்ளி வளாகத்தில் தங்கியுள்ளனர். 
  மீண்டும் கனத்தை மழை பெய்தால் கொழும்பன் மலையில் இருந்து மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் உயிரைப் பணயம் வைத்து மலைவாழ் மக்கள் பழைய இடத்திலேயே வசிக்கச் சென்றுள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பான மாற்றிடத்தை உடனடியாக வழங்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai