சுடச்சுட

  

  கோவையில் இரு நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: தலைமறைவாக உள்ள இளைஞர் குறித்து போலீஸார் விசாரணை

  By DIN  |   Published on : 13th September 2019 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவையில், ராஜஸ்தான் மாநில இளைஞர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இத்தகவலை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறிய காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  கோவை, டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள சுக்கிரவார்பேட்டையில் உள்ள தங்குமிடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அறை எடுத்து தங்கி உள்ளனர்.  
  தங்களது அறைக்கு வந்து தங்கியிருந்த  நபரிடம் நாட்டுத் துப்பாக்கிகள் இருப்பதாக போலீஸாருக்கு இளைஞர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெரைட்டி ஹால் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் இளைஞர்கள் அறைக்குச் சென்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஆய்வு செய்தனர். 
  அப்போது, அங்கிருந்த பை ஒன்றில் 30 செ.மீ. மற்றும் 10 செ.மீ. அளவிலான இரு நாட்டுத் துப்பாக்கிகளும், சில தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது. இதில் 10 செ.மீ. அளவில் இருந்த நாட்டுத் துப்பாக்கி துருப்பிடித்து செயல்படாத நிலையிலும், 30 செ.மீ. அளவிலான நாட்டுத் துப்பாக்கி இயங்கும் நிலையில் இருப்பதும், இவை இரண்டும் வடமாநிலத் தயாரிப்புகள் என்பதும் தெரியவந்தது.
  இந்நிலையில் புகார் கூறிய இளைஞர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் இவர்களது அறையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவானி சிங் (27) என்பவர் சில வாரங்களுக்கு முன்பு தங்கியிருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவை வந்த பவானி சிங் டவுன்ஹால் பகுதியில் உள்ள பிளைவுட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். ஓரிரு மாதங்களுக்கு முன்பு பணிபுரியும் இடத்தில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வேலையை விட்டுச் சென்றுள்ளார். பின்னர் சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் கோவை திரும்பிய பவானி சிங், அதே நிறுவனத்தில் வேலை கேட்டபோது நிறுவன உரிமையாளர் வேலை தர மறுத்துவிட்டார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இந்த இரு இளைஞர்கள் தங்கியிருந்த அறையில் சிறிது நாள்கள் தங்கி வேலை தேட அனுமதி கேட்டதாகக் கூறப்படுகிறது. 
   ஒரே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பவானி சிங் தங்குவதற்கு இந்த இரு இளைஞர்களும் இடம் அளித்துள்ளனர். இந்நிலையில் பவானி சிங் கடந்த சில நாள்களாக அறைக்குத் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த இளைஞர்கள், அவருக்குச் சொந்தமான கைப்பையைச் சோதனையிட்டபோது அதில் துப்பாக்கிகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 
  தற்போது தலைமறைவாக உள்ள பவானி சிங்கை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் எதற்காகத் துப்பாக்கி வைத்திருந்தார், இவருக்கு ஏதேனும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  இந்நிலையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அலட்சியமாகச் செயல்பட்டதாக அவரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார். 
  இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழக முதல்வரின் கோவை வருகையை முன்னிட்டு ஆய்வாளர் செந்தில்குமார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். எனவே, துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட தகவலை உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுபோன்ற முக்கியமான தகவல்களை காலம்தாழ்த்திக் கூறியதை ஏற்க முடியாது. தற்போது அவரைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்துள்ளோம். மேற்கொண்டு விசாரித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai