சுடச்சுட

  

  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மூழ்கியது காந்தவயல் தரைப்பாலம்

  By DIN  |   Published on : 13th September 2019 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேட்டுப்பாளையத்தில் பவானிசாகர் அணையின் பின்பக்க நீர்தேக்கப் பகுதியில் காந்தவயல் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
   மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கேரளம், நீலகிரி மாவட்டப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணை பகுதியில் இருந்து பவானி ஆறு வழியாகவும், கூடலூர் மாயாறில் இருந்து கோத்தகிரி, தெங்குமராஹடா வனப் பகுதி வழியாகவும், குன்னூர், கோத்தகிரி சிற்றாறுகளில் இருந்து வரும் தண்ணீர் பவானி ஆறு வழியாகவும் மழை நீர் பவானிசாகர் அணைக்கு வந்தடைகிறது. 
  கடந்த ஆண்டு பவானிசாகர் அணை நிரம்பியதால் மேட்டுப்பாளையம் பகுதியில் இச்சிப்பள்ளி, காந்தவயல், பழத்தோட்டம், லிங்காபுரம், திம்ராயம்பாளையம், ஆலங்கொம்பு, மூலத்துறை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்தேங்கியது. இதனால் 6 மாதத்துக்கும் மேலாக விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
  இந்நிலையில், இந்த ஆண்டு நீலகிரி, கேரளப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, மேல்பவானி, எமரால்டு, பைக்காரா உள்ளிட்ட அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியதால் அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இங்கிருந்து வரும் தண்ணீர் அனைத்தும் பவானிசாகர் அணையை வந்தடைகிறது. 
  இதனால் லிங்காபுரம் - காந்தவயல் இடையே உள்ள தரைப்பாலம் தற்போது தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் காந்தவயல், உலியூர், மேலூர், ஆளூர் உள்ளிட்ட கிராமங்கள் தனித் தீவுபோல் மாறியுள்ளன. ஆண்டுதோறும் இதுபோல் பவானிசாகர் அணையின் பின்பக்க நீர்தேக்கப் பகுதிகளில் தண்ணீர் தேங்கும்போது காந்தவயல் -லிங்காபுரம் தண்ணீரில் மூழ்கும். தற்போதும் இதேபோல மூழ்கியுள்ளது. தொடர்ந்து இந்த நிலை ஏற்படுவதால் இப்பகுதியில் மேல்மட்டப் பாலம் ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் உள்ளனர். 
   இதுகுறித்து காந்தவயல் பகுதி மக்கள் கூறுகையில், பவானிசாகர் அணையில் தண்ணீர் அதிகரித்துள்ளதால் காந்தவயல் தரைப்பாலம் தற்போது தண்ணீரில் மூடியுள்ளது. இதனால் பள்ளிக் குழந்தைகள், வேலைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினரும் பரிசல் மூலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai