சுடச்சுட

  

  வாழை இலை வியாபாரி கொலை: இரு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை

  By DIN  |   Published on : 13th September 2019 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாழை இலை வியாபாரியைக் கொலை செய்த வடமாநில இளைஞர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
  ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நந்தலால் கெம்பாராம் (22), சுதிர் கெராய் (19). இவர்கள் இருவரும் கோவை சடையம்பாளையத்தில் உள்ள மில் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமுகை அருகேயுள்ள ஆலாங்கொம்பு பகுதியில் வசிக்கும் தனது நண்பர்களைப் பார்க்க இருவரும்  2016 ஆகஸ்ட் 9இல் சென்றுள்ளனர். 
  அப்போது அப்பகுதியில் வசிக்கும் வாழை இலை வியாபாரி சுரேஷ் (45) என்பவரது மனைவி மல்லிகாவை, நந்தலால் கெம்பாராம், சுதிர் கெராய் ஆகியோர் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. 
  இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் இளைஞர்கள் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதையடுத்து இருவரையும் அவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அன்றைய தினம் இரவு சுரேஷின் வீட்டுக்கு வந்த இளைஞர்கள் அவரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதுபோல அருகில் உள்ள தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அவரைத் தாக்கி, கற்களைத் தலையில் போட்டு கொலை செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த செல்லிடப்பேசி, நகைகளைத் திருடிக் கொண்டு தப்பியோடினர். 
  இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிறுமுகை போலீஸார், சுரேஷைக் கொலை செய்த நந்தலால் கெம்பாராம், சுதிர் கெராய் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் நந்தலால் கெம்பாராம், சுதிர் கெராய் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி டி.ஹெச்.முகமது ஃபரூக் வியாழக்கிழமை உத்தரவிட்டார். அரசு வழக்குரைஞர் பி.குருபிரசாத் ஆஜரானார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai