சுடச்சுட

  

  வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறைக்கு நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம்

  By DIN  |   Published on : 13th September 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறைக்கு நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.  
  கோவை மாவட்டத்தில், 1,900 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு பருவத்தில் சராசரியாக 98 ஆயிரத்து 500 டன் தக்காளி விளைகிறது. பெரும்பாலான நேரங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்து நிலையான விலை கிடைப்பதில்லை. இதனால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். இதனால், விற்பனை செய்யாமல் கீழே கொட்டுவது, அறுவடை செய்யாமல் செடிகளிலே விட்டு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல் போன்ற நிலை காணப்படுகிறது. இதனைத் தவிர்க்க தக்காளியைப் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிட்நுட்ப வசதியை ஏற்படுத்த  வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். 
  இந்நிலையில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கீழ் கோவை மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறைக்கு நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநர் ரா.விஷ்ணுராம்மேத்தி கூறியதாவது:
  தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தக்காளியை கழுவி, அரைத்து, கூழாக்கி, பதப்படுத்தி பாட்டில்களில் நிரப்புவதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தினமும் 1 டன் தக்காளி மூலம் 300 கிலோ தக்காளி கூழ் உற்பத்தி செய்ய முடியும். இதனை மேலும் மதிப்புக்கூட்டி ஜாம், சாஸ் போன்றவை தயாரிக்கலாம். கூழாக்கியப் பின் கிடைக்கும் சக்கைகளை கொண்டு நிறமிகள் தயாரிக்கலாம். 
  தவிர, இந்த இயந்திரத்தில் கொய்யா, மா, பப்பாளி ஆகிய பழங்களையும் கூழாக்கலாம். நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகை அல்லது குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. 
  இதன்மூலம் தக்காளி உள்பட பழங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம். விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். தற்போது வாகனப் பதிவு உள்பட பணிகள் நடைபெற்று வருகின்றன. தகுதியான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தேர்வு செய்து ஒப்பந்த அடிப்படையில் வாகனம் வழங்கப்படும் என்றார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai