Enable Javscript for better performance
பம்ப்செட், கட்டுமானப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: தொழில் பாதுகாப்பு மாநாட்டில் தீர்ம- Dinamani

சுடச்சுட

    

    பம்ப்செட், கட்டுமானப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: தொழில் பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

    By DIN  |   Published on : 14th September 2019 06:57 AM  |   அ+அ அ-   |    |  

    கோவை தொழில் துறையினர் நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் என்றால் ஜாப் ஆர்டர்கள், பம்ப்செட் மூலப் பொருள், கட்டுமானப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று சிஐடியூ மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற தொழில் பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    கோவை மண்டலத்தில் தொழில் துறையினருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து விவாதிப்பதற்காக சிஐடியூ கோவை மாவட்டக் குழு சார்பில் தொழில் பாதுகாப்பு மாநாடு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்றது. சிஐடியூ மாநிலத் தலைவர் ஏ.செளந்திரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
    இதில், கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மகேந்திரா பம்ப்ஸ் உரிமையாளர் மகேந்திர ராமதாஸ், பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், கோப்மா மணிராஜ், டாக்ட் ஜேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    இந்த மாநாட்டில், ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு 5 சதவீதத்துக்கு மேல் ஜிஎஸ்டி கூடாது, ஜிஎஸ்டிக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும். மோட்டார் பம்ப் உற்பத்திக்கான மூலப் பொருள்களுக்கு 18 சதவீத வரியும், பம்ப் விற்பனைக்கு 12 சதவீத வரியும் என முரண்பாடான வரி விதிப்பு முறையை மாற்றி இரண்டுக்கும் 5 சதவீத வரி விதிக்க வேண்டும்.கட்டுமானப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும். ஜாப் ஆர்டர்களுக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டும். பஞ்சு விலையை ஆண்டுக்கு ஒரு முறை தீர்மானிக்க வேண்டும். மூலப் பொருள் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிப்பு கூடாது. சைத்தறிகளுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மேலும், கோவை தொழில் துறை சரிவைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனி அதிகாரியைக் கொண்ட குழுவை அமைத்து தீர்வு காண வேண்டும் எனவும், அரசின் செயல்பாடுகளில் மாறுதல் ஏற்படாவிட்டால் டிசம்பர் 13 ஆம் தேதி தொழிலாளர்களும், தொழில்முனைவோரும் இணைந்து ஆலைக் கதவுகளை அடைத்து 
    போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.சிஐடியூ மாவட்டத் தலைவர் பத்மநாபன், செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர் பலர் மாநாட்டில் பங்கேற்றனர்.
     

    kattana sevai