Enable Javscript for better performance
யானைகள் நடமாட்டம்: மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் இரவில் இரு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக- Dinamani

சுடச்சுட

    

    யானைகள் நடமாட்டம்: மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் இரவில் இரு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்க வேண்டுகோள்

    By DIN  |   Published on : 14th September 2019 06:58 AM  |   அ+அ அ-   |    |  

    மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் மாலை 6 மணிக்கு மேல் யானைகள் நடமாட்டம் உள்ளதால் அந்த வழியாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்க வேண்டும் என வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இடையே குன்னூர், கோத்தகிரி மலைப் பாதைகள் உள்ளன. இதில் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையின் இடையே குஞ்சப்பனை வரை சாலை குறுகலாக உள்ளது. இதில் வனப் பகுதியில் இருந்து வெளியேறி சாலைக்கு வரும் காட்டு யானைகள் மீண்டும் வனப் பகுதிக்குச் செல்லாமல் அப்பகுதியிலேயே சுற்ரி வருகின்றன.
    இந்தச் சாலையில் வனத் துறையின் அனுமதியில்லாமல் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாதுகாப்புத் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் யானைகள் சாலையில் இருந்து செல்ல முடியாமல் அங்கேயே சுற்றுகின்றன.
    இந்நிலையில், குஞ்சப்பனை பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு குட்டியுடன் வந்த 3 காட்டு யானைகள் மேட்டுப்பாளையம் சாலையில் நடமாடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் இரவு நேரத்தில் தங்களது செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது, சாலையில் இருந்த வாகனங்களை யானைகள் சேதப்படுத்தின. இதுகுறித்து தகவலறிந்து மேட்டுப்பாளையம், சிறுமுகை வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 3 மணி நேரம் போராடி குஞ்சப்பனை கோயில் வழியாக யானைகளை விரட்டினர். 
    இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது:
    மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் யானைகள் வழித்தடத்தில் ஏற்படுத்தி உள்ள பாதுகாப்புத் தடுப்புகளை அகற்றி எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டும். இந்த சாலையில் மாலை 6 மணியில் இருந்து வன விலங்குகள் நடமாடத் துவங்குகின்றன.
    இதனால் இந்தச் சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்ல மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை தடைவிதிக்க வேண்டும். சமவெளிப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தினமும் வந்து செல்லும் சிலர் குஞ்சப்பனைப் பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் காட்சிமுனையில் நின்று மது மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர்.
    அப்போது, அங்கு வரும் காட்டு யானைகளை துன்புறுத்தும் செயலிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளை யானைகள் தாக்கும் நிலை ஏற்படுகிறது என்றனர்.
     

    kattana sevai