வால்பாறையில் மக்கள் குறைதீர் முகாம்
By DIN | Published On : 19th September 2019 08:17 AM | Last Updated : 19th September 2019 08:17 AM | அ+அ அ- |

வால்பாறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், கோட்டாட்சியர் ரவிக்குமார், வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேசியதாவது:
சமவெளிப் பகுதிகளை விட மலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கும் என்பதனை உணர்ந்து அதனை தீர்த்து வைக்கும் வகையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை வால்பாறையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும். வால்பாறையில் குறைவானவர்களே அரசின் நலத்திட்டங்களை பெற்று வருகின்றனர். எனவே, அதிகாரிகள் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.
சுய தொழில் துவங்க விருப்பமுள்ள பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதோடு தொழில் துவங்க மானியம் வழங்கப்படும். வன விலங்கு தாக்கி உயிரிழக்கும் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு அரசின் இழப்பீடு தொகை அல்லது எஸ்டேட் நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எஸ்டேட் நிர்வாகத்தினர் வசம் உள்ள புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்த நில அளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் சம்பளத்தை எடுக்க தோட்டத் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருவதை உணர்ந்து அடுத்த மாதம் முதல் அவர்கள் பணியாற்றக்கூடிய பகுதியிலேயே சம்பளத்தை ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். முகாமில் 341 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் மொத்தம் 597 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வால்பாறை அமீது, துணைத் தலைவர் மயில்கணேசன், வட்டாட்சியர் வெங்கடாசலம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சரவணபாபு உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.