கார், ரூ.40 லட்சத்துடன் மாயமான ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது

ஓய்வுபெற்ற பொறியாளரின் கார் மற்றும் ரூ.40 லட்சம் பணத்துடன் மாயமான கார் ஓட்டுநர் மற்றும்

ஓய்வுபெற்ற பொறியாளரின் கார் மற்றும் ரூ.40 லட்சம் பணத்துடன் மாயமான கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை, நீலிக்கோணாம்பாளையம், சர்க்கரை செட்டியார் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (62). மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி பொள்ளாச்சி அருகே உள்ள மலையாண்டிபட்டணத்தில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்தை விற்றுள்ளார். 
இதன் மூலம் கிடைத்தத் தொகை ரூ.40.38 லட்சத்தை காரில் எடுத்துக் கொண்டு கோவை திரும்பினார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கிஷோர் (26) என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். இவர் பழனிசாமியிடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஓட்டுநராகப் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில்,  வீட்டுக்கு வந்த பின்னர் பணம் வைத்துள்ள பையை எடுத்துக் கொண்டு வருமாறு கூறி விட்டு பழனிசாமி வீட்டுக்குள் சென்றுள்ளார். ஆனால், பழனிசாமி காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றதும், பணப் பையுடன், காரையும் எடுத்துக் கொண்டு கிஷோர் மாயமானார்.
இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸாரிடம் பழனிசாமி புகார் அளித்தார். மாநகர காவல் துணை ஆணையர் பி.பெருமாள் உத்தரவின் பேரில் சிங்காநல்லூர் குற்றப் பிரிவு ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
தனிப் படை போலீஸார் நடத்திய விசாரணையில், கிஷோர் தனது நண்பரான ஈரோட்டைச் சேர்ந்த கலைச்செல்வன் (29) என்பவருடன் பெங்களூரு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பயன்படுத்திய மற்றொரு செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு போலீஸார் ஆய்வு செய்தபோது, இருவரும் ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்துக்கு விரைந்த தனிப் படை போலீஸார் அங்கு சில நாள்கள் தேடுதல் நடத்தி நண்பர்களுடன் சுற்றித் திரிந்த கிஷோர் மற்றும் கலைச்செல்வனைப் பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.33.81 லட்சத்தையும்,  திருடிய பணத்தில் வாங்கிய தங்க நகைகள், கார் உதிரி பாகங்கள் என மொத்தம் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, காரின் பதிவு எண் கொண்டு போலீஸார் பிடித்து விடக்கூடாது என்பதற்காக எண்ணை மாற்றி போலி ஆவணங்களைத் தயாரித்து திருச்சி, பெங்களூரு, புதுச்சேரி, ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ளனர். 
மேலும், நட்சத்திர விடுதிகளில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், தனது உறவினர் பெண் ஒருவரை கிஷோர் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். இதன்மூலம் செல்லிடப்பேசி கோபுர சிக்னல்களைக் கொண்டு அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து கைது செய்தோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com