மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தொழிலாளர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையின் தொழிலாளர் சங்க 8 ஆவது மாநில மாநாடு கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். வே.செந்தில்குமார் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கிவைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆ.செல்வம் சிறப்புரையாற்றினார். வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணியமும், நிதிநிலை அறிக்கையை மாநிலப் பொருளாளர் கே.புகழேந்தியும் சமர்ப்பித்தனர். 
இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுத் துறை வாகனங்களின் பழுதுநீக்கும் பணியை தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் உள்ளவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தத் துறையில் அனுமதிக்கப்பட்ட 1,297 பணியிடங்களில் தற்போது 823 பணியிடங்கள் காலியாக உள்ளன. தொடக்க நிலை தொழில்நுட்பப் பணியிடங்கள் மட்டும் 451 இடங்கள் காலியாக உள்ளன.
கடந்த 4 ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறையால் அரசு வாகனங்கள் தனியார் பணிமனைகளில் பழுது நீக்குவதற்கு அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக அரசுப் பணம் விரயமாகிறது. எனவே, இந்தத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
மேலும், மத்திய தொழில்நுட்ப ஊழியர்களுக்கு வழங்குவதைப் போன்று புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் பணிமனை கட்டடங்களை பழுதுபார்க்க வேண்டும். பழுது நீக்கும் கைக்கருவிகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அவற்றை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவராக எம்.வெங்கடேசன், பொதுச் செயலாளராக ஆர்.பாலசுப்பிரமணியம், பொருளாளராக கே.புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com