24 மணி நேர குடிநீர்த் திட்டம் குறித்து வதந்திகளைப் பரப்புகின்றனர் : மாநகராட்சி ஆணையர் பேட்டி

கோவை மாநகராட்சியில் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள 24 மணி நேர குடிநீர்த் திட்டம் குறித்து சிலர்

கோவை மாநகராட்சியில் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள 24 மணி நேர குடிநீர்த் திட்டம் குறித்து சிலர் வதந்திகளைப் பரப்புவதாக  மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மாநகரில் 60 வார்டுகளுக்கு 24 மணி நேரக் குடிநீர் திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் குடிநீர்க் குழாய்கள் அமைத்து  24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கும் பணிகளை மட்டுமே சூயஸ் நிறுவனம் மேற்கொள்ளும். மாநகராட்சி சார்பில் பில்லூர், பவானி, ஆழியாறு, சிறுவாணி உள்ளிட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் பெற்றுத்தரப்படும் குடிநீரை வார்டுகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்கள் மூலம் பகிர்ந்து, மக்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி விநியோகிக்கும் பணியையும், குழாய் சீரமைப்பு, பழுதுபார்ப்புப் பணிகளை மட்டுமே சூயஸ் நிறுவனம் மேற்கொள்ளும். மற்றபடி யாருக்கு இணைப்பு வழங்க வேண்டும், வழங்கக் கூடாது, இணைப்புகளுக்கு கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சியின் உத்தரவின்பேரில்தான் நடைபெறும். தன்னிச்சையாக அந்த நிறுவனம் செயல்பட முடியாது. இத்திட்டத்தால் பொது குடிநீர்க் குழாய்கள் அகற்றப்படும், உப்புநீர் கிடைக்காது என்றெல்லாம் சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். அப்படி எதுவும் நடைபெறாது. 
மேடான மற்றும் தாழ்வானப் பகுதிகளில் 21 அடி வரை நீர் செல்லுமாறு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதால், மின் மோட்டார்கள் உதவியின்றி ஒரு கட்டடத்தின் முதல் தளம் வரை எளிதில் குழாய் மூலமாக தண்ணீர் பெற முடியும். திட்டப் பணிகள் நடைபெறும் போதே குடிநீர் இணைப்புகளும் படிப்படியாக வழங்கப்படும். விரைவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வழங்கப்பட உள்ளது என்றார். 
பேட்டியின் போது, மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்ன ராமசாமி, மாநகராட்சிப் பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com