அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டே செம்மண் அள்ள வேண்டும்: கோவை வடக்கு கோட்டாட்சியர் அறிவுறுத்தல்

கோவை அருகே சின்னத்தடாகம் பகுதியில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டே அனைவரும் செம்மண்

கோவை அருகே சின்னத்தடாகம் பகுதியில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டே அனைவரும் செம்மண் எடுக்க வேண்டும் எனவும், அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை  வடக்கு கோட்டாட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்தார். 
கோவையை அடுத்த தடாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏறத்தாழ 250 செங்கல் சூளைகள் செயல்படுகின்றன. இங்கு தினமும் லட்சக்கணக்கான செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
இங்குள்ள மலையடிவார பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் சுமார் 30 அடி ஆழத்தில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். 
இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தி செங்கல் சூளை அதிபர்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்து விளக்கங்கள் அளிக்க மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் கோவை வடக்கு வருவாய் வட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டம் நஞ்சுண்டாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு, கோவை வடக்கு கோட்டாட்சியர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வட்டாட்சியர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கோட்டாட்சியர் சுரேஷ்குமார் பேசியதாவது: 
இப்பகுதியில் அதிக அளவில் மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார்கள் வந்துள்ளன. அரசு விதிமுறைகளை மீறி இப்பகுதியில் மண் அள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய  சென்னையில் இருந்து அதிகாரிகள் குழு  வர உள்ளது. எந்த இடங்களில் அதிக அளவு மண் எடுக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இதே நிலை தொடருமாயின் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். 
தொடர்ந்து பேசிய பெ.நா.பாளையம் டிஎஸ்பி மணி, உரிமம் இல்லாமல் லாரி ஓட்டுவதை சூளை உரிமையாளர்கள் ஊக்கப்படுத்துவது தவறு. கொத்தடிமைகளாக சிறுவர்களை வேலைக்கு வைத்து இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதனை சூளை அதிபர்கள் தவிர்க்க வேண்டும் என்றார். 
கூட்டத்துக்குப் பின்னர்  கோவை மாவட்ட செங்கல் சூளை உற்பத்தியாளர் சங்க கெளரவத் தலைவர் சி.ஆர்.ராமசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் செங்கல் சூளைகள்  செயல்பட்டு வருகின்றன. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறிய விதிமுறைகளைப் பின்பற்றித்தான் செங்கல் சூளைகள் இயங்குகின்றன. விதிமீறல் இருந்தால் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார். 
இக்கூட்டத்தில் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தர்மராஜ், செயலாளர் கவிசரவணன், பொருளாளர் சம்பத், விகேவி.சுந்தரராஜன், வனத் துறையைச் சேர்ந்த அய்யாசாமி, கனிமவளத்துறை துணை இயக்குநர் (பொறுப்பு) பிரசாத், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மணிவண்ணன், மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர்கள் தேவராஜன், கண்ணன், அன்னூர்,மேட்டுப்பாளையம் வட்ட துணை வட்டாட்சியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளை அதிபர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com