சொத்து வரி உயர்வைக் கண்டித்து மோட்டார் பம்புசெட் தொழிற்கூடங்கள் 27 இல் வேலைநிறுத்தம்: கோப்மா அறிவிப்பு

சொத்து வரி உயர்வைக் கண்டித்து மோட்டார் பம்புசெட் தொழிற்கூடங்கள் செப்டம்பர் 27ஆம் தேதி

சொத்து வரி உயர்வைக் கண்டித்து மோட்டார் பம்புசெட் தொழிற்கூடங்கள் செப்டம்பர் 27ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கோப்மா அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட மோட்டார் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (கோப்மா) தலைவர் மணிராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 
மோட்டர் பம்புசெட் தொழில் சரிவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பும் ஒரு காரணம்.  ஜிஎஸ்டி வரிகளை குறைக்கக் கோரி மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலமாகவும், அமைச்சர்களை நேரில் சந்தித்தும்  வலியுறுத்தினோம். மோட்டர் பம்புசெட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ஜாப் ஒர்க் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
இந்தியா முழுவதும் ஒரே வரிமுறையை கொண்டுவந்தால் மூலப் பொருள்கள் விலை குறையும் என்றும், அதன்மூலம் உற்பத்திப் பொருள்களின் விலையும் குறையும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு எவ்விதமான மூலப்பொருள்களின் விலை குறையாததோடு கட்டுப்பாடின்றி அதிகரித்துவிட்டது. இதனால் குறுந்தொழில் செய்வோர்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.
 குறிப்பாக கோவை மாவட்டத்தில் மட்டுமே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மோட்டார் பம்புசெட் உற்பத்தியாளர்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்பு நிறுவனங்கள், கூலிக்கு வேலை செய்யும் ஜாப் ஒர்க் நிறுவனங்களின் மூலதன கடன் தொகை அதிகரித்தது. ஜிஎஸ்டியில் பெருநிறுவனங்களுக்கும்-குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் வேறுபாடின்றி மத்திய அரசு தனது வரிக்கொள்கையை வகுத்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.1.5 கோடி வரை உற்பத்தி-விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு முழு கலால் வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு புதிய சலுகைகள் தராவிட்டாலும் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த சலுகைகளைப் பறித்ததால் பல்லாயிரக்கணக்கான குறுந்தொழில் நிறுவனங்கள் முடங்கிவிட்டன. ஏறக்குறைய 70 சதவீத குறுந்தொழில் கூடங்கள் வாடகைக் கட்டடங்களிலேயே இயங்கி வருகின்றன. நூறு சதவீத அளவுக்கு சொத்து வரி அதிகரித்தால் வாடகையும் பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, நூறு சதவீதம் சொத்து வரி உயர்த்தியதை முற்றிலும் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் எங்களது வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை அடைத்து செப்டம்பர் 27ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து இப்போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com