மின்வாரியத்தில் கேங்மேன் பதவி:நீதிமன்றத் தடையை மீறினால் வழக்கு: தொழிற்சங்கம் எச்சரிக்கை
By DIN | Published On : 29th September 2019 03:28 AM | Last Updated : 29th September 2019 03:28 AM | அ+அ அ- |

நீதிமன்ற தடையை மீறி மின்வாரியத்தில் கேங்மேன் பதவிக்கு நேர்முகத் தேர்வு நடத்த முயற்சித்தால் மின்வாரியம் மீது வழக்குத் தொடரப்படும் என தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கச் செயலாளர் சரவணன் தலைமையில் சங்க நிர்வாகிகள், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரை முருகனிடம் வெள்ளிக்கிழமை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
மின் வாரியத்தில் கேங்மேன் பதவி தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அப்பதவிக்கு,நேர்முகத் தேர்வு நடத்த கோவை மண்டல மின்வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கோவை மண்டலம் உள்பட பல இடங்களில் இதற்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
மின்வாரியம் தன்னிச்சையாக உருவாக்கிய கேங்மேன் பதவியை நேரடி நியமனம் செய்ய எடுத்து வரும் நடவடிக்கைக்கு தடை கோரியும், ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரியும், கேங்மேன் பதவிக்கான அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும் தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பபட்டுள்ளது.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சம்மந்தப்பட்ட பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறும் நடவடிக்கைக்கு மட்டுமே நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் கேங்மேன் பணி நியமனம் தொடர்பாக எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு போன்ற எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்றும், தற்போதையை நிலையே தொடர வேண்டும் என்றும், இது சம்மந்தமான வேறு எந்த முடிவுகளும் எடுக்கக் கூடாது எனவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் தடையை மீறி மின்வாரியத்தில் கேங்க்மேன் பதவிக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்த முயற்சிகள் மேற்கொண்டால், மின்வாரியத்தின் மீது வழக்கு தொடரப்படும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எனவே, இந்தப் பதவி தொடர்பாக நேர்முகத் தேர்வுகளை மின்வாரியம் நடத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.