கல்லூரி மாணவ, மாணவியர் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி

கோவை ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. பயணிகளுக்கு, சேலம் கோட்ட  உதவி கூடுதல் பொது மேலாளர் அண்ணாதுரை துணிப்பைகளை விநியோகித்தா


கோவை ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. பயணிகளுக்கு, சேலம் கோட்ட  உதவி கூடுதல் பொது மேலாளர் அண்ணாதுரை துணிப்பைகளை விநியோகித்தார். 
தூய்மை இந்தியா  திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர் ரங்கநாதன் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் 55 பேர் கோவை ரயில் நிலைய வளாகத்தில் தூய்மைப் பணிகளை சனிக்கிழமை மேற்கொண்டனர். 
சேலம் கோட்ட உதவி கூடுதல் பொது மேலாளர் அண்ணாதுரை பணிகளைத் துவக்கி வைத்தார். கோவை ரயில்நிலைய இயக்குநர் சதீஷ் சரவணன் முன்னிலை வகித்தார். 
இந்நிகழ்ச்சியில், ரயில் நிலைய வளாகத்தில் கிடந்த குப்பைகள், உணவுக் கழிவுகளை மாணவ, மாணவியர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சுத்தம் செய்து அகற்றினர். தொடர்ந்து, ரோட்டரி சங்கத்தின் சார்பில்  5-ஆவது பிளாட்பாரத்தில் வரையப்பட்டுள்ள காந்தி ரயிலில் இருந்து இறங்கி வருவது போன்ற ஓவியத்தை சேலம் கோட்ட உதவி கூடுதல் மேலாளர் அண்ணாதுரை மலர் தூவி திறந்து வைத்தார். அதன் பிறகு 1 மற்றும் 2 -ஆவது பிளாட்பாரங்களில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் அரைவை இயந்திரத்தின் பயன்பாட்டைத் தொடக்கி வைத்தார். 
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு பயணிகள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகள் பெறப்பட்டு 400 பேருக்கு சேலம் கோட்ட உதவி கூடுதல் பொது மேலாளர் அண்ணாதுரை துணிப்பைகளை வழங்கினார். பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பயணிகளுக்கு மாணவர்கள் விநியோகித்தனர்.  ரயில்வே ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பயணிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.  இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,  ரயில்வே ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com