கோவையில் தென்னங்கன்றுகளுக்கு தட்டுப்பாடு: புதிதாக நடவு மேற்கொள்ள முடியாமல் காத்திருப்பு

கோவை மாவட்டத்தில் தென்னங்கன்றுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் புதிதாக நடவு மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் காத்திருக்க வேண்டியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. 

கோவை மாவட்டத்தில் தென்னங்கன்றுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் புதிதாக நடவு மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் காத்திருக்க வேண்டியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. 
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை உள்ளிட்ட வட்டாரங்களில் முக்கியச் சாகுபடியாக தென்னை உள்ளது. மாவட்டத்தில் 87,414 ஹேக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை நடவு செய்வதன் மூலம் 50 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடிய பயிராக உள்ளதுடன், மாதம் ஒரு அறுவடை, பராமரிப்புக் குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் தென்னை சாகுபடியை விவசாயிகள் பெரிதும் விரும்பி மேற்கொள்கின்றனர். 
இதனால் ஆண்டுதோறும் தென்னை சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருகிறது. வறட்சி மற்றும் வெள்ளை ஈ, சிவப்புக் கூண் வண்டு உள்ளிட்ட நோய்த் தாக்குதல்களால் ஆண்டுதோறும் கணிசமான அளவு மரங்கள் பாதிக்கப்படுகின்றன. வறட்சி, நோய்த் தாக்குதலின் வீரியத்தில் குறிப்பிட்ட அளவில் மரங்களில் காய்ப்புகள் குறைந்து பட்டுப்போகின்றன. இதனால், அம்மரங்களை அகற்றிவிட்டு மீண்டும் புதிய தென்னை மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்கின்றனர்.
புதிதாக தென்னை சாகுபடியை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கும் காய்ந்துபோன மரங்களை அகற்றிவிட்டு புதிய மரக்கன்றுகளை நடவு செய்யும் விவசாயிகளுக்கும் தேவையான தென்னங்கன்றுகள் வேளாண் துறையின் கீழ் செயல்படும் நாற்றுப் பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படுகின்றன. அதன்படி, கோவை மாவட்டத்தில் ஆழியாறில் தென்னை நாற்றுப் பண்ணை செயல்பட்டு வருகிறது. 
இங்கு நெட்டை, நெட்டை - குட்டை ஒட்டு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நெட்டை ரகக் கன்றுகள் ரூ. 45க்கும், நெட்டை -குட்டை ரகக் கன்றுகள் ரூ. 65க்கும் விற்கப்படுகின்றன. ஆனால்,  மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தென்னங்கன்றுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், புதிதாக நடவு மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.  
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த விவசாயி சுமதி கூறியதாவது: 
அன்னூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தென்னங்கன்றுகள் கேட்டு வருகிறேன். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. ஆழியாறு தென்னை ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்த தென்னங்கன்றுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். நாங்களும் கடந்த இரண்டு மாதங்களாக தென்னங்கன்றுகளுக்காக காத்திருக்கிறோம். வடகிழக்குப் பருவமழைக்கு முன் நடவு செய்தால் மழையில் மரங்கள் வேர் பிடித்து நன்கு வளர்வதற்கு வாய்ப்புள்ளது. வேறு மாவட்டங்களுக்கு சென்று எடுத்துவர வேண்டுமென்றால் தென்னங்கன்றுகளுக்கான பணத்தைத் தவிர்த்து வாகனங்களுக்கான வாடகையுடன் கூடுதல் செலவு பிடிப்பதுடன், அலைச்சல் உள்ளிட்டவையும் ஏற்படுகின்றன. எனவே, விவசாயிகளுக்குத் தேவையான தென்னங்கன்றுகளை மாவட்டத்திலே கிடைக்க வேளாண் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஒவ்வொரு பருவத்தின்போதும் மாவட்டத்துக்குத் தேவையான தென்னங்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த பருவங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தென்னங்கன்றுகள் கஜா புயலால் பாதித்த மாவட்டங்களுக்கு அரசின் அறிவுறுத்தல்படி அதிக அளவு அனுப்பப்பட்டுள்ளன. 
உள்ளூர் விவசாயிகளுக்குத் தேவையான தென்னங்கன்றுகள் பதியம் போட்டு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலம் வளர்ந்தப் பிறகே விவசாயிகளுக்கு வழங்கமுடியும். இருந்தும், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் 10 ஆயிரம் கன்றுகள் வரை விற்பனைக்கு உள்ளன. விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தின் உதவியுடன் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com